வெளி நாட்டுக்கு தப்பியோடுவதற்கு முன்பு அருண் ஜெட்லியைச் சந்தித்தேன்… மீண்டும் உறுதி செய்த விஜய் மல்லையா !!

By Selvanayagam PFirst Published Sep 12, 2018, 11:00 PM IST
Highlights

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியைச் சந்தித்தேன் என்று விஜய மல்லையா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிகளில்  9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் விஜய் மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

பிரிட்டனில்  தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று வழக்கு விசாரணைக்கு லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த விஜய் மல்லையா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெனிவாவில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வேண்டியது இருந்தது.

அப்போது இந்தியாவை விட்டு புறப்படும் முன்னதாக நிதியமைச்சரை சந்தித்து பேசினேன். வங்கி கடன்களை செட்டில்மெண்ட் செய்யப்படும் என தெரிவித்தேன். இதுதான் உண்மை. இப்போது அரசு தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நான் ஏற்க மாட்டேன் என விஜய் மல்லையா தெரிவித்தார்.

கிங்பிஷர் விமானங்கள் தொடர்ந்து பறக்க வேண்டும் என்பதற்காக 4000 கோடி ரூபாய் முதலீடு செய்தோம். ஆனால் குற்றச்சாட்டுகள் தற்போது வேறு பாதையில் செல்கின்றன. இதனை கோர்ட்டு முடிவு செய்யட்டும் என அவர் தெரிவித்தார். 

15,000 கோடி  ரூபாய் மதிப்புள்ள என் சொத்துக்களை கர்நாடகா நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன். தற்போது பலிகடாவாக உணர்கிறேன்.  காங்கிரஸ் – பாஜக என இரு கட்சிகளுக்கும் என்னை பிடிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

விஜய்  மல்லையாவின் இந்த பேச்சு அவர் நாட்டை வீட்டு வெளியேறுவதற்கு முன்னதாக யாரும் உதவினார்களா? என்ற கேள்வியை  எழுப்பியுள்ளது. விஜய் மல்லையா 2016-ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறும் போது நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லிதான் என்பது குறிப்பிடத்தது. 

click me!