
ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்புக்கு பிறகு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் வைகோ வை சந்தித்து ஈவிகேஎஸ் ஆதரவு கோரினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழந்தனர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதற்கு கூட்டணி கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதாக கூறினார். எல்லா துறைகளிலும் முதலிடத்தில் உள்ள திமுக அரசின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனவும் வைகோ தெரிவித்தார்.
இதனையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஈவிகேஎஸ் ஆதரவு கோரினார். இந்த சந்திப்பில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ ஹசன் மவுலானா மற்றும் தங்கபாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் முடிவில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், கமல் நிச்சயம் ஆதரவு தருவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். எங்கள் நிலைப்பாடு என்ன என்று நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து செயற்குழு கூட்டத்திற்கு பின் அறிவிப்போம். மக்களுக்கு எது நன்மை பயக்கும் என்பதை ஆலோசித்து முடிவெடுப்போம் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
என் வழி தனி வழி..! ஓபிஎஸ் மாவட்டத்தில் களம் இறங்கிய இபிஎஸ்..! கெத்து காட்டிய எடப்பாடி ஆதரவாளர்கள்