பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்ய ஆண்டு விழா
தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்போடு நடிகர் கமல்ஹாசன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக ராமேஸ்வரத்தில் தனது பயணத்தை தொடங்கி மதுரையில் தனது கட்சி பெயரை அறிவித்தார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தமிழக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டு வாக்கு சதவிகிதத்தை உயர்த்தியது.
இதனையடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்க உள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் 7ஆம் ஆண்டு விழாவையொட்டி அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும்
கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம். மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது.
உயர்த்திய கொடிகள் தாழாது
ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இழுக்கவேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு. மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. சாதி மதச் சழக்குகள் இருக்கும்வரை, வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை, ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்