நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கு இன்று முதல் விருப்பமனு வழங்கப்பட உள்ளது.
தயாராகும் அரசியல் கட்சிகள்
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படவு்ள்ள நிலையில்,தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டது. ஏற்கனவே திமுக சார்பாக தங்களது கூட்டணி கட்சியுடன் முதல் கட்ட தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது. விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே திமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு பெறும் பணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதே நேரத்தில் அதிமுக சார்பாக நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மேற்கொள்ள தொகுதி பங்கிட்டு குழு, பிரச்சாரக் குழு , விளம்பரக் குழு , தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு என நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டது .
அதிமுக விருப்ப மனு
அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, கடந்த 5 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு பொது மக்களை சந்தித்து கருத்துகளை கேட்டு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு இன்று முதல் வரும் மார்ச் 1 ஆம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் விருப்பமனு வழங்கப்பட உள்ளது.
தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தொகுதிக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து இன்று முதல் சமர்ப்பிக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். விருப்பமனு கட்டணமாக பொது தொகுதிக்கு 20 ஆயிரம் ரூபாயும் தனித்தொகுதிக்கு 15,000 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
மணல் கொள்ளை ஆட்சியில் மண்ணுயிர் காப்போம் திட்டமா? திமுகவை இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்..!