சென்னையில் களமிறங்கும் கமல்..? வேளச்சேரி தொகுதியில் களமிறங்க அதிரடி திட்டம்..!

By Asianet TamilFirst Published Dec 16, 2020, 8:54 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள வேளச்சேரி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் பிஸியாகிவர்கின்றன. சட்டப்பேரவைத் தேர்தலை முதன் முறையாக சந்திக்க உள்ள மக்கள் நீதி மய்யமும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவருகிறது. அக்கட்சியின் தலைவர் கமல், இப்போதே தேர்தல் பணியில் இறங்கிவிட்டார். மதுரையில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி தென் மாவட்டங்களில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும் வரும் தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிட உள்ளதாகவும் கமல் தெரிவித்துள்ளார்

.

கமல் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது கமல் சென்னையில் பெரிய தொகுதியான வேளச்சேரியில் போட்டியிடக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆர்.ரெங்கராஜ் 1,35,334 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார். இதில் தென் சென்னைக்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தேர்தலில் 35 ஆயிரம் வாக்குகளையும், வேளச்சேரி தொகுதியில் 23 ஆயிரம் வாக்குகளையும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பெற்றார். 
மேலும் தமிழகம் முழுவதும் படித்தவர்கள், பொருளாதாரத்தில் மேம்பட்ட மக்கள் வசிக்கும் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது. இதில் முதன்மையான தொகுதியாக இருப்பது வேளச்சேரி என்பது கமல் கணித்திருப்பதாகக் கூறப்படுகிறது. வேளச்சேரி தொகுதியில் திருவான்மியூர், அடையாறு, பெசண்ட் நகர், சாஸ்திரி நகர் போன்ற பகுதிகளில் கல்வி, பொருளாதாரத்தில் மேம்பட்ட மக்கள் அதிகம் உள்ளனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்போர் இத்தொகுதியில் அதிகம் உள்ளனர். 
இவர்களும், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், நடுத்தர வர்க்கத்தினர் தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களிப்பார்கள் என்று கமல் எண்ணுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் வேளச்சேரி தொகுதி பாதுகாப்பானதாக இருக்கும் என்று கமலுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முடிவு கமல் கையில்!
 

click me!