
அரசியலில் புதிதாக களம் இறங்கியிருக்கும் நடிகர்கள் கமலும், ரஜினியும் சேர்நது 10 சதவீத வாக்குளையே வாங்க முடியும் என பாமக நிறுவன் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, விடுதலைச்சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக போன்றவை கோலேச்சி வருகின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவு, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக்குறைவு போன்றவை காரணமாக தமிழக அரசியலில் ஓர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பரவலான கருத்து நிலவுகிறது.
இந்நிலையில்தான் நடிகர்கள் கமலஹாசனும், ரஜினிகாந்த்தும் புதிதாக அரசியலில் குதித்துள்ளனர். கமல் நாளை ராமேஸ்வரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.
ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.அவரும் விரையில் தனது கட்சியின் பெயர், கொள்கைகள் உள்ளிட்டவற்றை அறிவிக்க உள்ளார்.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற பாமக. பொதுக்கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், ரஜினியும், கமலும் சேர்ந்தாலும் கூட 10 சதவீத ஓட்டுதான் வாங்க முடியும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். டிசம்பர் மாதமே எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தல் வரும் என்று சொல்கிறார்கள். பாமகவை எதிர்க்கும் அதிமுக மற்றும் திமுக டெபாசிட் வாங்கக்கூடாது என்பது என்னுடைய ஆசை. இது நடக்க கூடியதுதான். பேராசை அல்ல என்று தெரிவித்தார்..
தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி பாமகவுக்கு மட்டும்தான் உண்டு என்றும், இதை நான் சொல்லவில்லை. கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்..
சாருஹாசனுக்கும், நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பார்த்ததும், பேசியதும் கிடையாது. உள்ளது உள்ளபடியே எதிர்காலத்தை கணிக்கக்கூடிய ஆற்றல் சாருஹாசனுக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். நடக்கப்போவதை அவர் சொல்லி இருக்கிறார் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்..
கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் சேர்ந்தாலும் கூட 10 சதவீத ஓட்டுதான் வாங்க முடியும் என்றும், ஆனால் பாமக எதிர் வருகிற எந்த தேர்தல் ஆனாலும் 40 முதல் 50 சதவீத வாக்குகளை வாங்குவோம். அந்த அளவுக்கு மக்கள் மனம் மாறி உள்ளார்கள் என்று ராமதாஸ் தெரிவித்தார்..