பெண்களை கடவுளாக வணங்குகின்ற நம் தமிழ் மண்ணில், பெண்ணினத்திற்கு உரிய பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
கல்லூரியில் மாணவிசுளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக, மாணவிகள் போராடி வரும் நிலையில் தமிழக அரசு உடனே விசாரித்து, தவறு இழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்று தர வேண்டுகோள்.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னையில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா ருக்மணி தேவி கலை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக அங்குள்ள பேராசிரியர் உள்பட நான்கு நபர்கள் மீது குற்றம் சாட்டி இக்கல்லூரியில் படிக்கும் மாணவிகள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலையை அறிந்து நான் மிகவும் வருத்தமுற்றேன். தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உரிய விசாரணை மேற்கொண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதேசமயத்தில் தங்கள் பிரச்சனையை கண்டு பயந்து அமைதியாக இருந்துவிடாமல், தைரியமாக போராட துணிந்த அத்துனை மாணவிகளுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். கலாஷேத்ரா கல்லூரியானது மிகவும் பிரசித்திபெற்ற ஒரு கல்வி நிறுவனமாக இருந்து வந்துள்ளது. இது போன்ற கல்வி நிறுவனத்திலேயே, மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக குற்றசாட்டுகள் எழுந்திருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது. மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் அத்தியாவசியமானது. மாணவிகள் கல்வி பயில தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தரவேண்டிய கடமை ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் உள்ளது. இதனை சரியாக கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்கின்றனவா? மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறதா? என்பதையெல்லாம் தமிழக அரசு முறையாக ஆய்வு செய்திட வேண்டும்.
undefined
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் மாணவ-மாணவிகள் மிகவும் பாதுகாப்போடு இருந்தனர். ஆனால் இன்றோ தமிழ்நாட்டில் எங்குமே பாதுகாப்பு இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. பெண்களை கடவுளாக வணங்குகின்ற நம் தமிழ் மண்ணில், பெண்ணினத்திற்கு உரிய பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, திமுக தலைமையிலான அரசு சட்டம் ஒழுங்கை சரியாக பாதுகாப்பதன் மூலம் இதுபோன்ற தவறுகள் சமூகத்தில் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளமுடியும். மேலும், தமிழ்நாட்டில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் அனைத்து வகையான கல்வி நிறுவனங்களிலும் படிக்கின்ற மாணவச் செல்வங்களை பாதுகாக்கின்ற பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, தமிழக காவல்துறை கல்லூரி மாணவிகளிடமிருந்து புகார்கள் ஏதும் வரவில்லை என்பதை சொல்லிக்கொண்டு இருக்காமல், கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையோடும் உரிய விசாரணையை மேற்கொண்டு, தவறு இழைத்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கடுமையான தண்டனையைப் பெற்று தரவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.