மு.க.ஸ்டாலினுக்கு ரகசியமாக துண்டு சீட்டு அனுப்பிய கலைராஜன்... அதிமுகவில் இருந்தபோதே இப்படியொரு சம்பவமா..?

By Thiraviaraj RMFirst Published Jan 6, 2020, 2:06 PM IST
Highlights

கலைராஜன் அதிமுகவில் இருக்கும்போது ரகசியமாக சட்டசபைக்குள் தனக்கு துண்டு சீட்டு கொடுத்தனுப்பி தன்னை பாராட்டியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ’’கலைராஜன் எப்போதுமே கொஞ்சம் வெளிப்படையாக பேசக்கூடியவர். எதையும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று ஒன்று பேசக்கூடியவர் அல்ல. இந்தக் கூட்டத்தை கூட எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை. மறைத்துப் பேசலாம். போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுவிட்டது. காவல்துறை தடுத்துவிட்டது. என்றெல்லாம் மறைத்து ஒளித்து எங்களைத் திருப்திப் படுத்துவதற்காகப் பேசலாம். ஆனால் அப்படி எல்லாம் பேசாமல் உள்ளதை உள்ளபடி பேசக்கூடிய ஒருவர்தான் கலைராஜன்.

அதை இப்போது அல்ல. அவர் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதே பார்த்திருக்கிறேன். அவர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து, சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் பார்த்திருக்கிறேன். ஆளுங்கட்சியாக இருந்து சட்டமன்ற உறுப்பினராகவும் அவரோடு பேசக்கூடிய, பழகக்கூடிய வாய்ப்பைப் பெற்றவன்தான் நான். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து, சில உரைகளை சட்டமன்றத்தில் பேசி, முடித்து அமர்ந்த பிறகு, திடீரென்று என்னிடத்திலே ஒரு சீட்டு வந்து சேரும். அங்கே பணியாற்றக்கூடியவர்கள் என்னிடத்திலே சீட்டு ஒன்று கொடுப்பார்கள். அதை எடுத்து படித்துப் பார்த்தால், உங்கள் பேச்சு அருமை அண்ணே என்று கையெழுத்து போட்டு என்னிடத்திலே அனுப்பி இருப்பார். அதேபோல் சில சமயங்களில் எழுதி அனுப்ப முடியாது. கையை உயர்த்தி காண்பிப்பார். எதையும் வெளிப்படையாக எடுத்து சொல்லக்கூடிய ஒரு பண்பாளராக, அரசியல் எல்லாம் கடந்து பழகக்கூடிய ஒரு சிறந்த செயல் வீரர் கலைராஜன்.

அவருடைய தந்தையார் மறைந்த நேரத்தில் கூட அவரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு நான் ஆறுதல் சொன்னேன். அதைக் கூட அவர் பல இடங்களில் எடுத்துச் சொல்லி இருக்கிறார். அந்த அன்பர்கள் என்னிடத்தில் வந்து சொல்லி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர் தொலைக்காட்சிக்கு சென்று விவாத மேடைகளில் பங்கேற்ற காட்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்போதும் செல்கிறார். அதிமுகவில் இருந்தபோதும் போய் இருக்கிறார். இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்திற்காகப் பேசுவது பெரிதல்ல.

ஆனால் அதிமுகவில் இருந்த நேரத்திலும், ஊடகத்தில் சென்று உட்கார்ந்து கொண்டு விட்டுக்கொடுக்காமல், திராவிட இயக்கத்தின் மீது யாராவது தவறு சொன்னால், தட்டிக் கேட்கக் கூடிய ஒருவராக அதை வெளிப்படுத்திக் காட்டக்கூடியவர்தான் நண்பர் கலைராஜன் .

இங்கே கூட உதயநிதி பேசும் போது சொன்னார். இந்த இயக்கத்திற்கு வந்து சேர்ந்த பிறகு முரசொலியில் தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறையாவது, அவரது கட்டுரை வந்துகொண்டிருக்கிறது. அதை நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த கட்டுரையில் இருக்கும் பொருள், அதில் இடம் பெறக்கூடிய சொற்கள், ஆகியவை திராவிட இயக்கத்தின் மீது கலைராஜன் எந்த அளவுக்கு பற்று கொண்டிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், அதே நேரத்தில் ஊடகத்திற்கு சென்று விவாதிப்பதிலே ஆற்றல் வாய்ந்தவராகவும், சிறந்த செயல் வீரராகவும், எல்லாவற்றையும் தாண்டி எல்லோரிடத்திலும் அன்போடு பழகக்கூடிய ஒரு பண்பாளராகவும் விளங்குபவர்தான் கலைராஜன்.

அப்படிப்பட்ட கலைராஜன் ஏற்கனவே தன்னை இந்த இயக்கத்தில் ஒப்படைத்துக் கொண்டிருந்தாலும், உங்களையும் இந்த இயக்கத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். அப்படி வந்து சேர்ந்திருக்கக்கூடிய உங்களை எல்லாம், மேற்கு மாவட்டத்தின் சார்பில் நம்முடைய அன்பழகன் அவர்கள் வரவேற்றிருந்தாலும், தலைமைக் கழகத்தின் சார்பில் உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

இன்னொரு நிகழ்ச்சி நடத்தப்போவதாக கலைராஜன் கூறியிருக்கிறார். இதைவிட ஒரு பெரிய நிகழ்ச்சியாக, எழுச்சியான நிகழ்ச்சியாக நடத்தப்போகிறேன் என்று சொன்னார். அவர்களையும் தலைமைக் கழகத்தின் சார்பில் வருக வருக என வரவேற்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
 

click me!