அடேங்கப்பா..! இத்தனை சாதனைகளா..? வியக்கவைக்கும் கருணாநிதியின் சாதனைப் பட்டியல்..!

By Asianet News TamilFirst Published Jun 3, 2022, 5:41 PM IST
Highlights

HBDKalaignar : பொதுவாழ்வில் 80 ஆண்டுகள், முரசொலி நிறுவனராக 75 ஆண்டுகள், கலைத்துறையில் 70 ஆண்டுகள், சட்டமன்றப் பணிகளில் 60 ஆண்டுகள், திமுக தலைராக 50 ஆண்டுகள், தமிழக முதல்வராக 19 ஆண்டுகள் என கருணாநிதியின் சாதனைகள் எல்லாம் அடேங்கப்பா ரகம். அந்தச்சாதனைகளைத் திரும்பி பார்ப்போமா?

பொதுவாழ்வில் 80 ஆண்டுகள்

இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்குவளையில் பிறந்த கருணாநிதி சிறுவனாக இருந்தபோது 14 வயதிலேயே பொது வாழ்க்கையில் குதித்தவர். 1938-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி, பள்ளிகளில் மும்மொழி கொள்கையை அறிவித்தார். இதன்படி பள்ளிகளில் இந்தி பாடங்கள் நடத்தப்பட்டன. இதை கண்டித்து இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்புப் படித்துகொண்டிருந்த கருணாநிதி, தன்னுடைய கையில் தமிழ்க் கொடியைப் பிடித்துக்கொண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டார். இதற்காக இந்தி ஆசிரியரிடம் அடி வாங்கினார் கருணாநிதி. ஆனாலும் தமிழ் மீது இருந்த கருணாநிதி தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றார். அந்த வகையில் கருணாநிதி 80 ஆண்டுகள் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்.

முரசொலி நிறுவனராய் 75 ஆண்டுகள்

தன்னுடைய மூத்தப் பிள்ளை முரசொலி நாளிதழ்தான் என்று சொன்னவர் கருணாநிதி. திராவிட இயக்கத்தின் கொள்கை முரசாகவும் திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாகவும் விளங்கி வரும் ‘முரசொலி’ நாளிதழை மாத இதழாகத்தான் கருணாநிதி தொடங்கினார். 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று முரசொலியைத் தொடங்கிய கருணாநிதி, அதன் நிறுவனராக மட்டுமல்ல, அதன் ஆசிரியராகவும் விளங்கினார். உடன்பிறப்புகளுக்கு ஆயிரக்கணக்கான கடிதங்களை முரசொலி மூலமாகத்தான் எழுதினார். கருணாநிதி உடல்நலம் குன்றியிருந்தபோது 2017-ஆம் ஆண்டில் முரசொலியின் 75-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

 

கலைத் துறையில் 70 ஆண்டுகள்

கலைத் துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக கருணாநிதி இயங்கியிருக்கிறார். 1944-ஆம் ஆண்டு மே 28 அன்று பேபி டாக்கீஸ் என்று அழைக்கப்பட்ட  திருவாரூர் கருணாநிதி திரையரங்கில்தான் தன்னுடைய முதல் நாடகமான ‘சாந்தா (அல்லது) பழனியப்பன் ‘ என்ற  நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றினார். தொடர்ந்து பல நாடகங்களை அரங்கேற்றிய கருணாநிதி, 1946-ஆம் ஆண்டில்தான் திரைத் துறையில் காலடி எடுத்து வைத்தார்.  முதன்முதலில் ‘இராஜகுமாரி’-க்கு கதை - வசனம் எழுதினார் கருணாநிதி. பராசக்தி, மலைக்கள்ளன், புதுமைப்பித்தன், குறவஞ்சி, அரசிளங்குமரி வண்டிக்காரன் மகன், மருதநாட்டு இளவரசி, பணம்,நாம், திரும்பிப் பார், மணமகள், ராஜா ராணி, இருவர் உள்ளம், பாசப்பறவைகள், அபிமன்யு பூம்புகார், உளியின் ஓசை என ஏராளமான படங்களுக்கு கதை - வசனங்களை கருணாநிதி எழுதியுள்ளார்.

சட்டமன்றப் பணிகளில் 60 ஆண்டுகள்

1949-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திமுக, 1957-ஆம் ஆண்டில்தான் முதன் முறையாக தேர்தல் அரசியலில் களமிறங்கியது. அந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதன் முறையாக வெற்றி பெற்றார் கருணாநிதி. இதையடுத்து தஞ்சாவூர் (1962), சைதாப்பேட்டை (1967, 1971), அண்ணாநகர் (1977, 1980), துறைமுகம் (1989, 1991-ராஜினாமா), சேப்பாக்கம் (1996, 2001, 2006), திருவாரூர் (2011, 2016) என தொடர்ச்சியாக 13 முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாநிதி. இந்தியாவில் 13 முறை தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்கு சென்ற ஒரே தலைவர் கருணாநிதிதான்.

 

திமுக தலைவராக 50 ஆண்டுகள்

1949-ஆம் ஆண்டில் சென்னை ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்டது திமுக. திமுகவை தொடங்கிய பேரறிஞர் அண்ணாதுரை பொதுச்செயலாளராக இருந்தார். பெரியாரை தலைவராக நினைத்து அந்தப் பதவியை காலியாகவே விட்டார் அண்ணா. ஆனால், 1969-ஆம் ஆண்டில் அண்ணா மறைந்த பிறகு தமிழக முதல்வரானார் கருணாநிதி.  இதனையடுத்து 1969-ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று திமுகவின் 4-வது பொதுக்குழுவில் கருணாநிதி முதன் முறையாக திமுக தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் தொடர்ச்சியாக திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி, உயிரிழந்த 2018, ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை தலைவராகவே இருந்தார். அந்த வகையில் திமுகவின் தலைவராக 50 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி. இந்தியாவில் ஒரு கட்சியின் தலைவராக ஒருவர் 50 ஆண்டுகள் நீடித்திருக்க முடியுமா என்பதே சந்தேகம்தான்.

முதல்வராக 19 ஆண்டுகள்

தமிழகத்திலேயே அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் கருணாநிதிதான். அண்ணா மறைவுக்குப் பிறகு 1969-இல் முதல்வராகப் பதவியேற்றார் கருணாநிதி. இதனையடுத்து 1971 - 76, 1989 - 91, 1996 - 2001, 2006 - 2011 என மொத்தம் 19 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் கருணாநிதி. இதில் 1976, 1991 என இரண்டு முறை கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. குறிப்பாக 1991-இல் திமுக ஆட்சி முடிய 3 ஆண்டு காலம் இருந்த நிலையில் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி 19 ஆண்டுகள் முதல்வராக இருந்ததும் சாதனைதான்.

click me!