கஜா புயல் நிவாரண நிதி …. 10 கோடி ரூபாய் வழங்கி அசத்திய பினராயி விஜயன் !!

By Selvanayagam PFirst Published Nov 29, 2018, 9:54 AM IST
Highlights

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டப் பகுதி மக்களுக்கு உதவும் வகையில் 14 லாரிகளில் நிவாரணப் பொருட்களும், 10  கோடி ரூபாய் நிதியும் கேரள அரசு சார்பில் வழங்கப்படுவதாக அந்த மாநில முதலமைச்சர்  பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாகை, வேதாரண்யம் இடையே கடந்த 16-ம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. இந்த புயலால் டெல்டா மாவட்டங்கள் திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 60 பேர்வரை உயிரிழந்துள்ளனர், மக்கள் வீடுகளையும், தோட்டங்களையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். ஏறக்குறைய 3.50 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் உதவிகளையும், நிவாரணப் பொருட்களையும் அளித்து வருகின்றனர். நடிகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அரசியலைக் கடந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10  கோடி ரூபாய் நிதி வழங்குவதாகக் கேரள முதலமைச்சர்  பினராயி விஜயன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழக சகோதரர்களுக்குக் கேரள மக்களின் ஆதரவைத் தெரிவிக்கிறோம். புதன் கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவசர உதவியாக 10 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்க முடிவு செய்தோம்.

உணவு, துணி, ஆடைகள் உட்பட்ட 14 லாரி அவசர பொருட்கள் ஏற்கனவே அனுப்பி வைத்தோம். ஆறு மருத்துவ குழுவும் கேரளா மின்சார வாரியத்தைச் சேர்ந்த 72 ஊழியர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தேவை என்றால் மேலும் உதவியை அனுப்பவுவோம் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே கேரள அரசு தமிழகத்துக்கு  சிதியுதவி அறிவித்துள்ளதற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

click me!