அய்யா இப்படி செய்யலாமா? மணமக்களுக்கு மரணபயமா? போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த காடுவெட்டி குரு மகள்!

By sathish kFirst Published Nov 29, 2018, 8:52 AM IST
Highlights

காதல் திருமணம் செய்து கொண்ட காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை காவல் நிலையம் வரை சென்று பாதுகாப்பு கேட்ட விவகாரத்தின் பின்னணியில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பெயர் அடிபடுவது அந்த கட்சித் தொண்டர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை திடீரென தனது அத்தை மகன் மனோஜ் கிரணை திருமணம் செய்து கொண்டார். கும்பகோணத்தில் உள்ள மனோஜ் கிரண் வீட்டில் மிகவும் எளிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு விருதாம்பிகை தனது கணவர் மனோஜ் கிரணுடன் சாமி மலை முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய போது தான் அவருக்கு திருமணம் நடைபெற்ற தகவல் வெளியானது.

திருமணம் முடிந்த கையோடு அரியலூர் மாவட்டத்தில் உள்ள காடுவெட்டி கிராமத்திற்கு நேராக சென்ற விருதாம்பிகை தனது தந்தை சமாதியில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தனது தந்தை வாழ்ந்த வீட்டிற்கு விருதாம்பிகை தனது கணவர் மனோஜூடன் செல்ல முயன்ற போது தான் பிரச்சனை ஆனது. காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த சில ஊர்ப் பெரியவர்கள் விருதாம்பிகை மற்றும் மனோஜை அங்கிருந்து உடனடியாக செல்லுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் விருதாம்பிகை தனது தந்தை வீட்டுப் பக்கம் கூட போகக்கூடாது என்று சப்தம் போட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் காடுவெட்டியில் உள்ள யாரும் விருதாம்பிகையுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பயந்த போன விருதாம்பிகை – மனோஜ் தம்பதி நேராக கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றனர். அவர்களுடன் விருதாம்பிகையின் சித்தி, மற்றும் விருதாம்பிகையின் சகோதரர் கனலரசனும் சென்றனர்.

காதல் திருமணம் செய்த தங்களுக்கு காடுவெட்டி கிராமத்தில் உள்ள சிலரால் ஆபத்து இருப்பதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், எஸ்.பி ஆபிசில் தகவல் தெரிவித்து பாதுகாப்பு கொடுப்பது பற்றி பரிசீலிப்பதாக கூறி இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

மாவீரன் என்று அழைக்கப்பட்ட காடுவெட்டி குருவின் மகள் தனக்கு பாதுகாப்பு கேட்டு காவல்நிலையம் செல்ல காரணம் என்ன என்று அவரது உறவினர்களிடம் கேட்ட போது, விருதாம்பிகை அவரது அத்தை மகனை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்த தகவல் காடுவெட்டி குரு மருத்துவமனையில் இருக்கும் போது தான் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. தனக்கு உடல் நிலை சரியாக வந்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக குருவும் கூறியிருந்தார்.

அதே சமயம் ராமதாஸ் மருத்துவமனையில் வந்து பார்த்த போது தனது மகள் திருமணம் பற்றி சில விஷயங்களை குரு பேசியதாக சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவரை ராமதாஸ், காடுவெட்டி குருவின் மகளுக்கு பேசி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. குரு மறைந்த பிறகு அந்த பையனையே திருமணம் செய்து கொள்ளுமாறு ராமதாஸ் தரப்பில் இருந்து விருதாம்பிகையிடம பேசியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் விருதாம்பிகை தான் தனது அத்தை மகனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று கூறிவிட்டு, தற்போது கல்யானமும் செய்து கொண்டார். இதனால் தான் காடுவெட்டியில் உள்ள சிலர் விருதாம்பிகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அனைவருமே பா.ம.கவினர் தான் என்றும்,அவர்களால் தங்களுக்கு ஆபத்து இருப்பதாக கூறியே விருதாம்பிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாராம்.

click me!