குடிப்பது கூழ்; கொப்பளிப்பது பன்னீர்... அதிமுக அரசை கடுமையாக விமர்சித்த கி.வீரமணி...!

By Thiraviaraj RMFirst Published Mar 1, 2021, 6:00 PM IST
Highlights

வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் வயது ஏறுவதினால் வயதுவரம்பும் தாண்டி அவர்கள் வேலைவாய்ப்பை வருங்காலத்திலும் இழக்கும் நிலைதானே யதார்த்தம்?
 

ஓய்வு வயதை உயர்த்தியும், வெளி மாநிலத்தவருக்கு வாய்ப்பளித்தும் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடுவதா? என கேள்வி எழுப்பிய திராவிட கழக தலைவர் கி.வீரமணி. தமிழக இளைஞர்களே, நடக்கவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் உதயசூரியனை உதிக்கச் செய்வீர் உதவாக்கரைகளை வீட்டுக்கு அனுப்புவீர்!! என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘’கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் நடைபெறும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.அரசின் நிதிநிலை மிகவும் மோசமாகியுள்ளதைப் பற்றிக் கவலைப்படாமல் ஏராளமான கடன்வாங்கி, இப்போது அளிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தின்படி இக்கடன் தொகை ரூ.5லட்சத்து 70ஆயிரம் கோடி ஆக உயர்ந்துள்ளது.பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தைக்கும்கூட ரூ.63 ஆயிரம் கடனோடு பிறக்கும் ‘கீர்த்தியை’ அதன் தலையில் கிரீடமாகச் சூட்டியுள்ளது அதிமுக அரசு.

இந்த நிதி நிலை நெருக்கடியால் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்குரிய தொகையை உடனடியாக தர இயலாத நிலையில், நிதித்துறை அதிகாரிகளா கிய சில ‘துன்மந்திரிகள்’ தவறான யோசனைப்படியோ என்னவோ, குறுக்கு வழியாக ஓய்வு பெறுவோரை ஓய்வு பெற விடாமல் தடுத்துள்ளனர். முதலில் ஓய்வு பெறும் வயதை 59 ஆக ஆக்கி அறிவித்து, பிறகு இப்போது நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமர்ப்பித்த இடைக்கால துண்டு விழும் பட்ஜெட்டில் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

வேலை கிட்டாமல் தற்கொலை எண்ணத்திற்குக்கூட தள்ளப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள பல இலட்சக்கணக்கான இளைஞர்கள், பட்டதாரிகளின் எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு – ஆணை நாசமாக்கியுள்ளது. பல ஆண்டுகளாக அரசுப் பணிகளை ஆற்றிடும் பல அரசு ஊழியர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு வாய்ப்புகளும் கதவடைக்கப்பட்டவைகளாகி விட்டன.

ஆசிரியர்கள் தகுதித் தேர்வில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைக்காகக் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்குச் சென்ற ஆண்டும் வேலை வாய்ப்பு – இந்த ஓய்வு பெறும் வயது நீட்டிப்புக் காரணமாக கிட்டவில்லை. இரண்டாண்டுகள்-அதுவும் கரோனா தொற்று, ஊரடங்கு, தொழில் முடக்கம், வறுமை, இதற்கிடையில் “வெந்த புண்ணில், அவர்தம் நொந்த உள்ளங்களில் வேல் பாய்ச்சலாமா?” வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் வயது ஏறுவதினால் வயதுவரம்பும் தாண்டி அவர்கள் வேலைவாய்ப்பை வருங்காலத்திலும் இழக்கும் நிலைதானே யதார்த்தம்?

ஓய்வூதியப் பலன்களுக்குரிய நிதியை ஒதுக்குவதில் இயலாமையை திசை திருப்பி, இப்படி ஒரு தந்திரம் எத்தனை லட்சம் குடும்பங்களின் அடுப்புகளில் “பூனை உறங்கும் நிலையை” ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர வேண்டாமா? இதில் மற்றொரு வேடிக்கை “குடிப்பது கூழ்; கொப்பளிப்பது பன்னீர்” என்பது போன்று பக்கம் பக்கமாக நேற்று முன்னாள் வரை 1000 கோடி ரூபாய் செலவில் அரசு சாதனை என்று முழுப் பக்க விளம் பரங்களை பரிசாக தங்களுக்கு ஆதரவு தரும் ஏடு களுக்குத் தந்த டம்பாச்சாரித்தனத்தை என்னவென்று சொல்வது?

ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குச் சாவடிக்குள் சென்று வாக்களிக்கவிருக்கும் வேலை கிட்டாத வாலிபர்களே, உங்கள் வாழ்வில் மண் போட்ட ஆட்சியை – ‘ஜனநாயக ரீதியில் வீட்டுக்கனுப்பி’ சிறப்பான நல்லாட்சி தர – நாளும் மக்களின் நாயகனாக செயலாற்றும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்! புதியோர் ஆட்சியை தி.மு.க. நிறுவினால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு மலரும்.

இளைஞர்களே! உங்கள் வேலைவாய்ப்பை மற்ற மாநிலத்தவர்களுக்குத் தாரைவார்த்தும், வயதைஉயர்த்தியும், உங்கள் வயிற்றலடிக்கும் ஆட்சியைவீழ்த்த, துயரைப்போக்கும் புதியதோர் மாற்றத்தைத்தர தி.மு.க.கூட்டணிக்கு வாக்களித்தால் பழையஆட்சியின் தவறுகள் திருத்தப்படும். புதியதிட்டங்கள் உதயசூரியனால் உதிக்கும் ஏமாந்து விடாதீர்கள்!! ஆட்சி மாற்றம் நம் இனத்தின் மீட்சிக்கான மாற்றம் – விடியலுக்கான வித்தூன்றுவீர்! மறவாதீர்!

click me!