மோடி ஆட்சியின் ஆறாண்டு சாதனைகள் என்னென்ன..? ‘மக்கள் விரோத ஆட்சி’ என்று மதிப்பீடு செய்த கே.எஸ். அழகிரி!

By Asianet TamilFirst Published May 30, 2020, 8:52 PM IST
Highlights

"மோடி ஆட்சி மீது மக்கள் கடும் வேதனையில் உள்ளதை எவரும் மறுக்க இயலாது. எனவே, ஆறு ஆண்டு கால ஆட்சி என்பது ஏழை, எளியவர்களை வாட்டி வதைத்த ஒரு மக்கள் விரோத ஆட்சி என்றே மதிப்பீடு செய்வதே மிகமிக பொருத்தமாக இருக்கும். இதை மக்களிடையே பரப்புரை செய்வது மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளின் கடமையாகும்.” 

ஆறு ஆண்டு கால மோடி ஆட்சி என்பது ஏழை, எளியவர்களை வாட்டி வதைத்த ஒரு மக்கள் விரோத ஆட்சி என்றே மதிப்பீடு செய்வதே மிகமிக பொருத்தமாக இருக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரண்டாம் முறையாகப் பொறுப்பேற்றதன் முதலாமாண்டு இன்றுடன் நிறைவடைகிறது. மேலும் 2014-20 வரை என மோடி பிரதமராகப் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனையொட்டி பாஜகவினர் கொண்டாடிவருகின்றனர். பாஜக ஆட்சியின் சாதனைகளையும் பட்டியலிட்டு வருகிறார்கள் பாஜகவினர். இந்நிலையில் மோடி ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகள் சாதனை என்ன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
அதில், “தங்கள் சாதனை குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். உண்மையிலேயே அவர்கள் கொண்டாடும் அளவுக்கு இந்த ஆறு ஆண்டுகளில் புரிந்த சாதனைகள் என்ன ? இந்தியாவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா ? இதுகுறித்து ஆய்வு செய்து விமர்சிக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சியின் கடமை. 2014 பொதுத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் அயல்நாட்டில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் செலுத்துவோம், விவசாயிகளின் விளை பொருளுக்கு உற்பத்தி செலவோடு 50 சதவீதம் கூடுதலாக விளை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்து வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க ஆண்டுக்கு இரண்டு கோடி பேர்களுக்கு என ஐந்தாண்டுகளுக்கு 10 கோடி பேர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வழங்குவோம் என பலவிதமான வாக்குறுதிகளை வழங்கி, மக்களின் வாக்குகளை பெற்று பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்தது. ஆனால், முதல் ஐந்தாண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.


தேர்தலில் சாதனைகளை சொல்லி வாக்குகளை கேட்காமல் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்குகளைப் பெற்று மீண்டும் 2019ல் பிரதமராக மோடி பதவியேற்றார். கடந்த ஆறு ஆண்டுகளில் மோடி ஆட்சியில் நிகழ்ந்தது சாதனைகளா ? வேதனைகளா ? என்பதை ஆய்வு செய்தால் மிகுந்த ஏமாற்றமே ஏற்படுகிறது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வேலையில்லா திண்டாண்டத்தால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வறுமை 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2019-20 நிதியாண்டில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜனவரி-மார்ச் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியாவின் ரூபாய் மதிப்பு தற்போது ஆசியாவிலேயே மோசமான நிலையில் உள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
நிதி பற்றாக்குறை 3.3 சதவீதத்தில் இருந்து 4.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்திய தொழில்துறையின் உற்பத்தி 38.1 சதவிகிதமாக கடுமையாக குறைந்துள்ளது. கடந்த 44 காலாண்டுகளில் இத்தகைய வீழ்ச்சியை முதன் முறையாக இந்தியா கண்டுள்ளது. ஜனவரி - மார்ச் காலாண்டு என்பது கொரோனா பாதிப்புக்கு முந்தைய காலம். இந்த வீழ்ச்சியை உலக தர நிர்ணய அமைப்புகள் அனைத்தும் உறுதி செய்துள்ளன. கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சமமற்ற வருவாய் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளதாக கிரெடிட் சூயிஸ்ஸி அறிக்கை தெரிவிக்கிறது.


மத்தியில் மோடி அரசு பதவியேற்றபின் ரூ. 6 லட்சத்து 60 ஆயிரம் கோடி வரை விதிகளை மீறி இந்தியாவில் உள்ள வங்கிகள் கடன் கொடுத்துள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தொகை ரூபாய் 2 லட்சத்து 41 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்த பா.ஜ.க. அரசு, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டது. மோடி பிரதமரான பிறகு, பசுக்கள் தொடர்பான வன்முறை மற்றும் கும்பல் தாக்குதல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. இதற்கு பா.ஜ.க.வின் மதவெறி அரசியலே காரணம்.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டு நிதியுதவியும், ஊழலும் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. 2016 முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் 93 சதவிகிதம் பா.ஜ.க.விற்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆறு தேசிய கட்சிகளுக்கு மொத்தம் வழங்கப்பட்ட நன்கொடையான ரூபாய் 985 கோடியில், பா.ஜ.க.விற்கு மட்டும் ரூபாய் 915 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. ஒரே அறக்கட்டளை பா.ஜ.க.விற்கு ரூ.405 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை பா.ஜ.க.விற்கு ஒரு குறிப்பிட்ட அறக்கட்டளை வழங்குவதற்கு பின்னாலே இருக்கிற மர்மம் என்ன? பா.ஜ.க.விற்கு வழங்கப்பட்ட 98 சதவீத நன்கொடைகளில் வருமான வரித்துறையின் நிரந்தர கணக்கு எண்ணோ, முகவரியோ இல்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது.


தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடையையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு வாரி வழங்கியுள்ளன. ஏழு தேசிய கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கிய நன்கொடை ரூபாய் 1397.90 கோடி. இதில் பா.ஜ.க.வுக்கு வழங்கப்பட்டது ரூபாய் 1027.34 கோடி. இது மொத்த நன்கொடையில் 73.5 சதவிகிதம். ஆக, பா.ஜ.க. அரசு ஒரு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான ஊழல் அரசு என்று சொல்வதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. இந்த நன்கொடை பெறுவதில் பா.ஜ.க. நிகழ்த்திய முறைகேடுகள் குறித்து வருமான வரித்துறையோ, தேர்தல் ஆணையமோ இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. இத்தகைய அமைப்புகள் எல்லாம் பா.ஜ.க.வின் கைப்பாவையாக மாறியுள்ளன.
கடந்த 70 ஆண்டுகளில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தாத முதல் பிரதமர் மோடி. பாராளுமன்ற விவாதங்களிலோ, அமைச்சரவை ஆட்சி முறையிலோ நம்பிக்கையில்லாதவராக மோடி விளங்கி வருகிறார். ஜனநாயக அமைப்புகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில், சிபிஐ - சிபிஐ மோதல், ரிசர்வ் வங்கி - அரசு மோதல், உச்ச நீதிமன்றம்- அரசு மோதல் நடந்தது இந்தியாவிலேயே முதல்முறையாகும். இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்த சம்பவம் நடந்தேறியது. முதல்முறையாக பாதுகாப்புத் துறையின் முக்கிய ரகசிய ஆவணங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சக அலுவலகத்திலிருந்து திருடு போயின.
உலக அளவில் பட்டினியோடு வாழும் மக்கள் கொண்ட 117 நாடுகளில், இந்தியா 102வது இடத்தில் உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை வெளியிடுவதில் 2 ஆண்டுகள் தாமதம் ஆனது. சில முக்கிய அம்சங்களை தவிர்த்துவிட்டு, கடந்த 2017ம் ஆண்டுக்கான குற்ற அறிக்கை கடுமையான தணிக்கைக்குப் பிறகு சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது. அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கிரிமினல் மயமான அரசியலுக்கு பா.ஜ.க. முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் வழக்கும், பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சின்மயானந்தா மீதான வழக்கும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினராகி, தற்போது நாடாளுமன்ற பாதுகாப்புத்துறை குழுவில் இடம்பெற்றுள்ள பிரக்யாசிங் தாக்கூர் மீதான மலேகான் குண்டு வெடிப்பு வழக்கு சான்றுகள், மேலும் டிஎஸ்பி தேவேந்தர் சிங் வழக்கும் பல்வேறு காரணங்களால் என்ன ஆனது என்றே தெரியவில்லை.


தேர்தல் நிதியாக ரூ. 10 கோடியை ஆர்கேடபிள்யூ டெவலப்பர்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடம் பா.ஜ.க. பெற்றுள்ளது. தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக இதே நிறுவனத்திடம் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. பா.ஜ.க.வின் தீவிரவாத எதிர்ப்பு வேஷம் இதன்மூலம் அம்பலமாகியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் படுபாதாளத்தில் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மக்கள் கையில் பணம் இல்லை. வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு பொருளாதார பேரழிவிலிருந்து விடுபட இதுவரை உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், சாவும் நாளுக்கு நாள் பலமடங்கு கூடி வருகிறது. இது மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் வளர்த்து வருகிறது. இத்தோடு கடுமையான பொருளாதார பேரழிவை நாடு எதிர்கொண்டு வருகிறது. இதிலிருந்து சாதாரண ஏழை,எளிய மக்களை மீட்க, அவர்களுக்கு நிதி வழங்கி, வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மத்திய பா.ஜ.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? மக்கள் அடைந்த பயன் என்ன ? இதனால், மோடி ஆட்சி மீது மக்கள் கடும் வேதனையில் உள்ளதை எவரும் மறுக்க இயலாது. எனவே, ஆறு ஆண்டு கால ஆட்சி என்பது ஏழை, எளியவர்களை வாட்டி வதைத்த ஒரு மக்கள் விரோத ஆட்சி என்றே மதிப்பீடு செய்வதே மிகமிக பொருத்தமாக இருக்கும். இதை மக்களிடையே பரப்புரை செய்வது மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளின் கடமையாகும்.” என்று அறிக்கையில் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

click me!