பாஜகவில் இணையும்படி மு.க. அழகிரிக்கு அழைப்பு... பாஜகவில் சேர்ந்தவுடனே ஆட்டத்தை தொடங்கிய கே.பி.ராமலிங்கம்..!

By Asianet TamilFirst Published Nov 22, 2020, 10:43 AM IST
Highlights

பாஜகவில் இணையும்படி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுப்பேன் என அக்கட்சியில் இணைந்த கே.பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
 

அதிமுகவில் இரு முறை எம்.எல்.ஏ.வாகவும் திமுகவில் ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்தவர் கே.பி.ராமலிங்கம். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, அவருக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இதனால், திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் கே.பி.ராமலிங்கம். இவர் மு.க. அழகிரியின் ஆதரவாளராகவும் இருந்தவர் ஆவார். இந்நிலையில் கே.பி. ராமலிங்கம் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.


பாஜகவில் இணைந்த பிறகு கே.பி.ராமலிங்கம் பேசுகையில், “திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவுக்கு பிறகு அக்கட்சியின் தலைமையை ஏற்கும் மனப்பக்குவம் எனக்கு இல்லை. அதனால் பாஜகவில் இணைந்தேன். புதிதாக என்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு கே.பி.ராமலிங்கம் அளித்துள்ள பேட்டியில், “நான் பாஜகவில் இணைவதற்கு மு.க. அழகிரி எனக்கு வாழ்த்து தெரிவித்தார். மு.க. அழகிரி புதிதாக கட்சி தொடங்கும் முடிவில் இருக்கிறார். ஆனால், அவரை நான் பாஜகவில் இணைய அழைப்பு விடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
 

click me!