
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன், நாளை தன் பணியை தொடங்க உள்ள நிலையில் உயர் பதவியில் இருப்போரையும் விசாரிக்க வசதியாக, கமிஷனுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார்.
ஜெ., மரணத்தில், பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்' என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து விசாரணை கமிஷன் சார்பில், 'ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விபரங்கள் தெரிந்தோர், உறுதிமொழி பத்திர வடிவில், நவம்பர் மாதம் ., 22க்கு முன் அளிக்கலாம் என, விசாரணை கமிஷன் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதுவரை விசாரணை கமிஷனுக்கு, 70 கடிதங்கள் வந்துள்ளன. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆனுார் ஜெகதீசன், ஜெ., அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், ஐ.ஆர்.எஸ்., அதிகாரி ஒருவர் உட்பட, பலர்பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் நாளை முதல் ஜெ., மரணம் தொடர்பாக விசாரணை தொடங்க உள்ள நிலையில் , லண்டனிலிருந்து வந்த டாக்டர் பீலே, சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சசிகலா குடும்பத்தினர் என, அனைவரையும் விசாரிக்க வேண்டி உள்ளது.
இதையடுத்து உயர் அதிகாரிகளையும் விசாரிக்கும் வகையில் கமிஷனுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கக் கோரி, விசாரணை கமிஷன் சார்பில், அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்நிலையில் நீதிபதி ஆறுமுகசாமிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.