தர்மயுத்தம் பாகம்-2க்கு அச்சாரம்... ஓபிஎஸ்-ஈபிஎஸ்., மன ரீதியாக இணையவில்லை... அம்பலப்படுத்தும் மைத்ரேயன்!

First Published Nov 21, 2017, 10:03 AM IST
Highlights
Maithreyan hints that all is not well between EPS and OPS In a facebook post


அதிமுக.,வில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம், பின்னர் பிரிந்தும் பிரியாமல் இருந்த எடப்பாடி பழனிச்சாமி, இருவரும் இணைந்தும் இணைபிரியாமல் இருப்பதாகக் காட்டிக் கொண்டு எம்ஜி.ஆர்., நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், இரு அணிகளும் மன ரீதியாக இன்னும் இணையவில்லை என்று அம்பலப் படுத்தியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு எல்லாமாக இருந்து இயக்கிக் கொண்டிருந்த அதிமுக., எம்.பி., வா.மைத்ரேயன்.

இன்று தனது பேஸ்புக் பதிவில் அவர் பகிரங்கப் படுத்தியிருந்த விஷயம்... 

ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?

- என்று பதிவிட்டிருக்கிறார் மைத்ரேயன். இதன் மூலம், சந்தர்ப்ப வசத்தால், இரு அணிகளும் சேர நேரிட்டது என்றும், சேர்ந்து நூறாவது நாளை எட்டும் நிலையில் மன ரீதியாக இரு அணிகளும் சேரவில்லை என்றும் கூறியிருக்கிறார். மன ரீதியாக இரு அணிகளும் இணைய வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும், இன்னும் அப்படி இணையவில்லை என்றேதான் பொருளாகிறது.

முன்னர் அதிமுக.,வில் ஆட்சி ஓபிஎஸ்ஸுக்கு கட்சி சசிகலாவுக்கு என்று வெளியுலகுக்காக எழுதப் படாத ஒப்பந்தம் போட்டு செயல் படுத்திக் கொண்டிருந்தனர். அதன் பின்னர், கட்சியும் ஆட்சியும் சசிகலாவுக்கே என்ற சூழல் வந்தபோது, திடீரெனப் பொங்கி எழுந்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதியில் ‘உலகப் புகழ்பெற்ற’ சமாதி தியானம் செய்து, மானம் மரியாதை தன்மானம் எல்லாம் பேசி ‘தர்ம யுத்தம்’ தொடங்கினார். அந்த தர்ம யுத்தத்தில் முதல் படைத்தளபதியாக பின்னிருந்து இயக்கினார் வா.மைத்ரேயன் எம்.பி. பின்னாளில் தளபதிகள் ஓரிருவர் சேர்ந்து தர்ம யுத்தப் போர்ப்படை சிறிய அளவில் உருவானது. 

இதனிடையே, சசிகலா தன் அணியில் தளபதியாக எடப்பாடி பழனிசாமியைக் கொண்டு வந்த பின்னர், சிறை செல்ல நேர்ந்தது. அந்த நேரத்தில் எடப்பாடி அந்த அணியின் தலைவராக தானே முடிசூடிக்கொண்டார். இதை அடுத்து, பழனியும் பன்னீரும் தனித்திருக்கலாமா என்று கேட்டு, முடிச்சுப்போடும் வேலைகள் நடந்தன. அதற்குப் பின்னணியிலிருந்து கட்டளை இட்டது, தினகரன் என்ற எஜமானர். ஆனால், அந்த நிர்பந்தம், காலக் கெடு, நிபந்தனைகள் எல்லாம் சேர்ந்து இருவரும் இணைய ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது. போதாக் குறைக்கு, பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் பென்சில் ரப்பர் சிலேட்டு பல்ப்பத்துக்காக சண்டை போட்டு பள்ளிக்கூட வாத்தியார் அந்தப் பிள்ளைகளின் கையைப் பிடித்து சேர்த்து வைத்து சேக்கா போடச் சொல்லும் விதமாய் ஒரு காட்சியை நடத்திக் காட்டினார் அப்போதைய பகுதி நேர ஆளுநர் வித்யாசாகர் ராவ். 

முதல்வராக இருந்து ருசி கண்ட பன்னீர்செல்வம், தன்மானத்தை இழந்து துணை முதல்வராகப் பொறுப்பேற்ற போதே, இரு தரப்புக்கும் இடையிலான அடையாளம் காணப்படாத ரகசிய பேரங்கள் நடந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் பொதுவாக எழுந்தது. அப்படி என்றால், பேரங்களுக்காக நடந்த இணைப்பு எப்போது வேண்டுமானாலும் பிரிந்து கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை இப்போது, பன்னீர்செல்வத்தின் வலதுகரமாகத் திகழும் மைத்ரேயன், பகிரங்கமாகப் போட்டுடைத்திருக்கிறார். 

ஏற்கெனவே, இருவரும் இணைந்திருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தினகரன் ஆதரவாளரான புகழேந்தி, தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர், இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று வார்த்தைக்கு வார்த்தை பேசிக் கொண்டிருந்தனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, எடப்பாடியாரே நாங்கள் இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்று சொல்லிப் பார்த்துவிட்டார். இருந்தாலும், இன்று மைத்ரேயன் பதிவிட்டுள்ள பேஸ்புக் கருத்து மேலும் பல அனுமானங்களைத் தோற்றுவித்திருக்கிறது. 

இதனிடையே, மைத்ரேயனின் பேஸ்புக் கருத்துக்கு சிலர் இட்டுள்ள பின்னூட்டம், வெகு சுவாரஸ்யமானவை. அவற்றில் சில...

சுயநல வியாபார மனங்கள் எவ்வாறு இணையும்?
பதவிக்காக எடப்பாடியிடம் மண்டியிட்ட ஓபிஎஸ்!
மூன்று மாதங்கள் இல்லை, மூன்று வருடங்கள் ஆனாலும் பிளவு கூடுமே தவிர இணைப்பு இறுகாது. நிர்வாகிகளுக்கு பொறுப்பு நியமித்தோ அல்லது ஏதாவது ஒரு தேர்தலோ வரட்டும் அப்போது பார்க்கலாம். இணைப்பின் இறுக்கத்தை ....
அதிமுக.,வை நாசம் செய்துவிட்டீர்கள். இன்று நாம் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டோம்.
கழகமே கோவில் அம்மாவே தெய்வம் என்பதை நீங்கள் உள்பட அனைவரும் நினைத்தால் இந்தப் பதிவு இருக்காது
டெல்லிய நம்புறது வேஸ்ட்? எப்படா கழட்டி விடலாம்னு இருக்காங்க?
மனங்கள் மாறவேண்டும். இல்லாவிட்டால் கால் போன போக்கில் மனம் போகும்
இவர்கள் இணைந்ததால் தமிழக மக்களுக்கு என்ன பிரயோஜனம் ???
மக்கள் நலத்திட்டங்கள் ஒன்றுகூட உருப்படியாக நடைபெறவில்லை
என்ன தலைவரே உடைந்த கண்ணாடிகள் ஒட்டும் வரலாறு உண்டா
மனங்கள் ரணங்களாகவே இருக்கின்றன சார்.
இந்த இணைப்பு நடைபெறாமலேயே இருந்திருக்கலாம். தன்மானமாவது மிஞ்சியிருக்கும்!
ஸ்பெல்லிங் மிஸ்டேக்..  மனம் இல்லை பணம்னு சொல்லுங்க
நீங்க பிஜேபி.,ல சேர்ந்துருங்க
அர்த்தங்கள் ஆயிரம்... பாலில் கலந்த தண்ணீர் போல
பேசாம தர்ம யுத்தம் 2ம் பாகம் எடுத்துட வேண்டியதுதான். என்ன இனி ஓடுமான்னுதான் தெரியல
நீங்க நினைக்கிறது மட்டும் நடக்காது
உங்க தாய்க் கட்சிக்கு போகலாம் . அது உங்களுக்கு நல்லது மரியாதையும் கூட…

click me!