அமைச்சர் வேலையை மட்டும் பாருங்கள்...! மநீம-ல் யார் விலகுகிறார்? யார் சேருகிறார் என்பது பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம்...! ஜெயக்குமாருக்கு ஸ்ரீபிரியா காட்டம்

First Published Apr 27, 2018, 2:34 PM IST
Highlights
Just look at the minister job - sripriya


அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய வேலையை மட்டும் பார்த்தால் நல்லது என்றும் எந்த கட்சியில் யார் சேரப்போகிறார்கள்? யார் விலகப் போகிறார்கள் என்கிற தகவல் அவருக்கு எதற்கு என்று ஸ்ரீபிரியா காட்டமாக கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினராக இருந்த வழக்கறிஞர் ராஜசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த ஆறு மாதங்களாக கட்சி உருவாக பாடுபட்டேன். ஆனால், தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை செய்ய முடியாத காரணத்தால், தான் விலகுவதாக அவர கூறியிருந்தார். வழக்கறிஞர் ராஜசேகரின் கருத்தைக் ஏற்றுக் கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், அவரை விடுவிப்பதாக கூறியிருந்தார்.

இது குறித்து மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உயர்மட்டக் குழு உறுப்பினர்களைக் கட்டிக்காக்க முடியாத கமல், ஒரு நாட்டை எப்படி காப்பார் என்று கேள்வி எழுப்பியிருந்தார். உயர்மட்ட குழு உறுப்பினர் ஸ்ரீபிரியாவும் விலகப் போவதாக செய்தி வெளியாவதாகவும் அவர் கூறியிருந்தார்.

அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த கருத்துக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினரான ஸ்ரீபிரியா, அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய வேலையை மட்டும் பார்த்தால நல்லது என்று கூறியுள்ளார். எந்த கட்சியில் யார் சேரப்போகிறார்கள்? யார் விலகப் போகிறார்கள்? என்கிற தகவல் அவருக்கு எதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் கட்சியில் இருந்து எப்போது விலகப் போவதாக கூறினேன். இது ஊடகங்களில் இருந்து வந்த தகவலா? அல்லது அவரே (அமைச்சர் ஜெயக்குமார்) கிளப்பிவிடும் கதையா? மக்கள் நீதி மய்யம் நான் விரும்பி ஏற்றுக் கொண்ட கட்சி. இதற்கு முன்னர் பல கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்தும் நான் சேரவில்லை என்றார்.

மக்களுக்கு ஏதாவது நேர்மையாக செய்ய வேண்டும் என்ற கொள்கையுடன் வந்திருந்தால், இந்த கட்சியில் இணைந்தேன். மேலும் ஒரு அமைச்சராக இருப்பவர், ஒரு கட்சியில் இருந்து ஒருவர் விலகுகிறாரா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ளாமல் பேட்டி அளிப்பது அவருடைய பொறுப்பின்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று ஸ்ரீபிரியா காட்டமாக கூறியுள்ளார்.

click me!