
அமெரிக்க ராணுவ ரகசியங்களை கசியவிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே லண்டனில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
விக்கி லீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உள்பட பல்வேறு தகவல்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தினார். அமெரிக்காவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்க அரசாங்கம் அசாஞ்சே மீது கடும் கோபம் கொண்டது.
இதற்கிடையே, சுவீடனில் 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாஞ்ச் மீது வழக்கு தொடரப்பட்டது. லண்டனில் இருந்த அசாஞ்சேவை இங்கிலாந்து போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது. எனினும், சுவீடன் கேட்டுக் கொண்டதை ஏற்று, அசாஞ்சை அந்நாட்டிடம் ஒப்படைக்க இங்கிலாந்து அரசு முடிவெடுத்தது. அப்படி சுவீடனிடம் ஒப்படைக்கப்பட்டால், சுவீடன் அரசு தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என்று அசாஞ்ச் பயந்தார்.
இந்நிலையில், அசாஞ்ச் கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி, லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். அந்நாட்டு அரசிடம் தனக்கு அரசியல் அடைக்கலம் தருமாறு கோரிக்கை விடுத்தார். தூதரகத்தில் இருந்து எப்போது வெளியே வந்தாலும் அவர் கைது செய்யப்படுவார் என்று இங்கிலாந்து அரசு கூறியது.
இந்த சூழ்நிலையில், அசாஞ்சுக்கு அரசியல் அடைக்கலம் கொடுப்பதாக ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் ரிகார்டோ படினோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கு இங்கிலாந்து அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் இங்கிலாந்து, ஈக்வடார் இடையே நல்லுறவு பாதிக்கத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து ஈக்குவடார் தூதரகத்தில் அடைக்கலமடைந்திருந்த அசாஞ்சே லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.