
தினகரனை ஜாமீனில் விடுவிக்க கூடாது என டெல்லி போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவரது ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உட்பட நான்கு பேரை டெல்லி குற்றவியல் போலீசார் கடந்த மாதம் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் இருக்கும் தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா சார்பாக டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது அப்போது தினகரனை ஜாமினில் விடுவிக்கக் கூடாது, தினகரனை வெளியில் விட்டால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று டெல்லி போலீஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை கைது செய்ய டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்தனர். அதுமட்டுமல்ல தினகரன் இதுவரை குரல் மாதிரி ஆய்வுக்கு ஒத்துழைக்காததால் தினகரனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என டெல்லி போலீசார் அழுத்தமாக வாதாடினார்.
இதையடுத்து தினகரனின் ஜாமீன் மனு இன்று தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தினகரன் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுமா? அல்லது போலீசாரின் கோரிக்கையை ஏற்று ஜாமீன் மறுக்கப்படுமா என்பது தெரிந்துவிடும்.