நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை, இந்த நிலையில் இன்று சென்னை வரும் ஜேபி நட்டா தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், பாமக, தேமுதிகவின் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாகவும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
சூடு பிடிக்கும் அரசியல் களம்
நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக அனைத்து கட்சிகளும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக 3வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக திட்டம் தீட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை இலக்காக வைத்து செயல்படுகிறது.
அந்த வகையில் தமிழகத்திலும் பாஜக கால் ஊண்ட பல்வேறு பணிகளை தொடங்கியுள்ளது. அதன் படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்க வைத்த நடைபயணம் பிரதமர் மோடி முன்னிலையில் வருகிற 25 ஆம் தேதியோடு முடிவடைகிறது.
பாதயாத்திரை அனுமதி மறுப்பு
இந்தநிலையில் 200வது தொகுதியாக சென்னை அண்ணாநகர் தொகுதியில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்துகொள்கிறார். தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், ஜேபி நட்டாவின் தமிழகம் பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னையில் பாதயாத்திதரை மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்ட நிலையில்,
பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காரணங்களுக்காக போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனையடுத்து இன்று மாலை தங்கசாலை பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த பொதுக்கூட்டத்தில் மாலை 7 மணிக்கு கலந்து கொள்ளும் ஜேபி நட்டா பாஜக அரசின் சாதனைகளையும், தமிழகத்தில் திமுக அரசின் மோசமான செயல்பாடுகளையும் விமர்சித்து பேசவுள்ளார்.
பாஜக கூட்டணி - ஜேபி நட்டா ஆலோசனை
இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு தியாகராயநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஜேபி நட்டா சிறிது நேரம் ஓய்வு எடுக்கவுள்ளார். அப்போது தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் பாஜக- ஓபிஎஸ் இடையிலான கூட்டணி உறுதி செய்யப்படும் என தெரிகிறது. இதே போல புதிய நீதிகட்சி தலைவர் ஏசி சண்முகம், தமாக தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டவர்களும் ஜேபி நட்டாவை சந்திக்கவுள்ளனர். பாமக மற்றும் தேமுதிக கூடுதல் தொகுதிகள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்பதால் கூட்டணி தொடர்பாக பாஜக இன்னும் எந்தவித முடிவும் எடுக்க முடியாத நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்
திமுக, பாஜக இருவருமே எங்கள் பகையாளிகள் தான் - ஜெயக்குமார் காட்டம்