விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையே பொழப்பாக வைத்திருக்கும் மோடி அரசு... கொந்தளிக்கும் வைகோ..!

By vinoth kumarFirst Published Apr 10, 2021, 3:37 PM IST
Highlights

விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையே வாடிக்கையாக கொண்டு இருக்கும் மத்திய பாஜக அரசு, உரங்களின் விலைகளை உயர்த்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது என வைகோ கூறியுள்ளார். 

விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையே வாடிக்கையாக கொண்டு இருக்கும் மத்திய பாஜக அரசு, உரங்களின் விலைகளை உயர்த்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது என வைகோ கூறியுள்ளார். 

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்;- இந்தியாவின் முன்னணி உரம் உற்பத்தி நிறுவனமான இப்கோ (Indian Farmers Fertiliser co-operative Limited - IFFCO) டை அமோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்தின் விலையை 58.33 விழுக்காடு, காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலையை 51.9 விழுக்காடு அளவுக்கு அதிகரித்து இருக்கின்றது. 

கடந்த பிப்ரவரி மாதம் 50 கிலோ எடையுள்ள டிஏபி, ஒரு மூட்டை ரூ 1200க்கு விற்பனை ஆனது. தற்போது ரூ 700 விலை உயர்ந்து ரூ 1900 ஆகி விட்டது. ரூ 1160க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை 10-26-26 காம்ப்ளக்ஸ் உரம், தற்போது ரூ 615 உயர்ந்து ரூ1775க்கு விற்பனை ஆகின்றது. அதேபோல் 20-20-013 காம்ப்ளக்ஸ் உரம் ரூ 950 ல் இருந்து ரூ 400 உயர்ந்து, தற்போது ரூ 1350 ஆக விற்கப்படுகின்றது. பயிர் சாகுபடிக்குத் தேவைப்படும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என்ற மூன்று வகையான உரங்களில், முதல் இரண்டு வகை உரங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுக்கின்றன.

சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் உரம் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. உரங்களின் விலையைக் கட்டுப்படுத்தி வந்த மத்திய அரசு, அவற்றின் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை உரம் உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டதால் அவை, விலையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன. உரத் தயாரிப்பில் மூலப் பொருளாக இருக்கும் பாஸ்பரிக் ஆசிட் விலை, பன்னாட்டுச் சந்தையில் உயர்ந்ததால், டிஏபி, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலை உயர்ந்து வருவதாக இப்கோ நிறுவனம் கூறி இருக்கின்றது. ஆனால் அதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. மத்திய பாஜக அரசு உரத்திற்கு அளித்து வந்த மானியத்தை குறைத்துவிட்டதால்தான், உரம் விலையை உற்பத்தி நிறுவனங்கள் 60 விழுக்காடு வரை உயர்த்தி விட்டன.

கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், உர மானியத்திற்கு ரூ 1 லட்சத்து 33 ஆயிரத்து 947 கோடி வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ரூ 79 ஆயிரத்து 530 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. உர மானியத்தில் ரூ 54 ஆயிரத்து 417 கோடி குறைக்கப்பட்டதால்தான், ரசாயன உரங்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது.விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையே வாடிக்கையாக கொண்டு இருக்கும் மத்திய பாஜக அரசு உரம் விலைகளை உயர்த்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. உடனடியாக டிஏபி, காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உரங்களின் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்று வைகோ கூறியுள்ளார்.

click me!