பொய் செய்தி பரப்புங்கள்... அண்ணன் செந்தில்பாலாஜியுடன் சேர்ந்து அதகளப்படுத்தும் தங்கை ஜோதிமணி..!

By Thiraviaraj RMFirst Published Jun 17, 2019, 6:04 PM IST
Highlights

வரலாற்றுக் கடமையை செய்ய விரும்பினால் இன்னும் ஐந்தாண்டுகள் இருக்கிறது. களைப்படைந்து விடாமல் இருக்க கொஞ்சம் பொறுமையாகப் பொய் செய்திகளைப் பரப்புங்கள்'' என மக்களவை எம்.பி ஜோதிமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
 

வரலாற்றுக் கடமையை செய்ய விரும்பினால் இன்னும் ஐந்தாண்டுகள் இருக்கிறது. களைப்படைந்து விடாமல் இருக்க கொஞ்சம் பொறுமையாகப் பொய் செய்திகளைப் பரப்புங்கள்'' என மக்களவை எம்.பி ஜோதிமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

கரூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுப்பது தொடர்பாக எம்.பி.ஜோதிமணி, அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து சென்று மனு அளித்தார். இது குறித்து ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில், ‘’கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் 2004 ல் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதற்கு அரசு உத்திரவு பிறபிக்கப்பட்டது. அப்பொழுது நான் கவுன்சிலராக பொறுப்பில் இருந்தேன். குடிநீர், விவசாயம் இவற்றைக் கருத்தில் கொண்டு 5 ஆண்டுகாலம் மணல் அள்ளுவதற்கு எதிராக விவசாயிகள், பொதுமக்களைத் திரட்டிப் போராடி 2008 ல் நீதிமன்றத்தில் நிரந்தர தடை ஆணையை பெற்றுள்ளேன்.

இத்தடை உள்ள பகுதிகளில் நீதிமன்றத் தடை ஆணை இருப்பதால் மணல் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் யாருக்கும் அனுமதி வழங்கமுடியாது. யாரும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வெளியூறுக்கு விற்பனை செய்ய முடியாதபடி ஊர் கண்காணிப்பு எங்கள் பகுதியில் அமலில் உள்ளது. எப்பொழுதும் இருக்கும்.

அதே நேரம் தற்பொழுது கரூர்,மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் காவிரி ஆற்றில் மணல் உள்ள பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் மணல் கொள்ளை நடந்துவருகிறது. திருச்சி மாவட்ட நிர்வாகம் உள்ளுர் தேவைகளுக்கு மட்டும் மாட்டு வண்டியில் மணல் அள்ள முறையாக அனுமதி சீட்டு வழங்கியுள்ளது.

ஆனால் கரூர் மாவட்டத்தில் ஆளும் கட்சியில் உயர்பொறுப்பில் இருப்பவர்கள் கரூர் மாவட்ட நிர்வாகம் மாட்டு வண்டிகளுக்கு அனுமதி வழங்காமல் தடுத்து, இயந்திரங்கள் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபடுவது, தாங்களே அனுமதி இல்லாமல் மாட்டுவண்டியில் மணல் ஓட்டி லாரியில் ஏற்றி வெளியூறுக்கு விற்பனை செய்வது,மாட்டு வண்டிக் காரர்களிடம் பணம் பறிப்பது என்று தொடர்ந்து அராஜகத்தில் இறங்கியுள்ளனர். இதுதான் கரூரில் அவர்கள் ஆற்றிவரும் ஒரே மக்கள் சேவை!

இதனால் ஆற்றங்கரையில் இருந்தும் ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கு மணல் கிடைக்காமல் கரூரில் இருந்து வெளியூறுக்கு விற்பனை செய்யப்பட்ட அதே மணலை,வெளியூரிலிருந்து அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.தேர்தல் பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டி ஓட்டிப் பிழைக்கும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இதை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த அராஜகத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவரை மாட்டுவண்டி விவசாயிகளோடு சந்தித்து மணல் சேமிப்பு அதிகம் உள்ள இடங்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளூர் தேவைகளுக்கு மட்டும் மணல் அள்ள மாட்டு வண்டிகளுக்கு சட்டப்படி முறையான அனுமதி வழங்கும்படியும், மாட்டுவண்டியில் மணல் எடுத்து யாரவது வெளியூருக்கு லாரியில் ஏற்றி விற்பது தெரிந்தால் தயவுதாட்சண்யம் இல்லாமல் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் , சட்டவிரோதமாக ஆளுங்கட்சியின் உயர்பொறுப்பில் இருப்பவர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடும் இயந்திரங்களை பறிமுதல் செய்து உடனடியாக அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.

நாங்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்திப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு வாங்கல் வனப்பகுதியில் சட்டவிரோதமாக 200 லோடு மணல் குவிக்கப்பட்டிருப்பது கவனத்திகு வந்தது. உடனடியாக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுபினர் செந்தில் பாலாஜி மாவட்ட வருவாய்த்துறை ஆய்வாளர்,மாவட்ட வனத்துறை அதிகாரி இவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றதால் நடவடடிக்கை எடுக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை மணல் விசயத்தில் எவ்விதமான சமரசத்திற்கு அன்றும்,என்றும் இடமில்லை என்பதே எனது உறுதியான நிலைப்பாடு.

நான்கு நாட்களாக வேலை மெனக்கெட்டு வழக்கம்போல கடுமையாக உழைத்து பொய்,அவதூறுகளை பரப்பிய பிஜேபி. ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இணையதளத்திற்கும், கரூர் மாவட்டத்தில் செயல்படும் அவர்கள் ஆதரவாளர்களுக்கும், ஆளும்கட்சியின் அதிகார முகமூடி அணிந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டுவந்த அனைவருக்கும் சகோதரியாக ஒரு இலவச அறிவுரை. உங்கள் சக்தியை மக்களுக்குப் பயனுள்ள நல்லவழிகளில் பயன்படுத்துங்கள்.

மேலும் தொடர்ந்து பொய் செய்திகளை பரப்பும் வரலாற்றுக் கடமையை செய்ய விரும்பினால் இன்னும் ஐந்தாண்டுகள் இருக்கிறது. களைப்படைந்து விடாமல் இருக்க கொஞ்சம் பொறுமையாகப் பொய் செய்திகளைப் பரப்புங்கள். அவற்றை வழக்கம்போல புன்னகையோடு, நிதானமாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்’’  என அவர் தெரிவித்துள்ளார்.  
 

click me!