அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகி திமுகவில் ஐக்கியம்.. கட்சியை அழிக்கும் எடப்பாடியார்.!

By vinoth kumarFirst Published Nov 25, 2021, 9:06 AM IST
Highlights

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சிறுபான்மையினர் செயலாளர் அன்வர்ராஜாவை, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்க முயன்றதாக கூறிய பஷீர், அதிமுக அழிவு பாதையில் செல்வதாக தெரிவித்தார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை  ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் மோதல் நீட்டித்து வருவதாக  திமுகவில் இணைந்த பஷீர் கூறியுள்ளார். 

அதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளராக இருந்த ஜெ.எம்.பஷீர் கடந்த 28ம் தேதி எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார். சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதிமுகவுக்கான வாக்குவங்கி சரிந்தது. சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டம் வந்த போது சட்டத்திற்கு ஆதரவாக முகம்மது ஜான் எம்.பியை வற்புறுத்தினார்கள். அவரை வற்புறுத்தியது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். எடப்பாடி பழனிசாமி எனும் தனிமனிதன் முதலமைச்சராக தொடர வேண்டும் என்பதற்காக முகம்மது ஜான் வாக்களித்தார். 

ஆனால் அவர் மறைவுக்கு பிறகு ஆறுதல் கூட எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. இன்றைக்கு வந்த திமுக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு அதிமுகவில் மரியாதை இல்லை. அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான். இஸ்லாமியர்களுக்கு எதிராக துரோகம் இழைத்தவர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அவர் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினார். மேலும், அவரை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் ஓங்கி குரல் கொடுத்தார். 

இதனையடுத்து, அவர் பேட்டியளித்துக்கொண்டு இருக்கும் போதே சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளர் பதவியிலிருந்து மட்டுமல்லாது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ஜே.எம்.பஷீர் நீக்கப்பட்டார். இதனையடுத்து, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பஷீர் திடீரென ராமநாதபுரத்திற்கு வந்திருந்த  ஓ.பன்னீர்செல்வத்தின் காலில் விழுந்து அவரை சந்தித்து பேசினார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பஷீர் உடன் நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறி வந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைச்செயலாளர் ஜே.எம்.பஷீர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை  ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் மோதல் நீட்டிப்பதாக கூறினார். அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சிறுபான்மையினர் செயலாளர் அன்வர்ராஜாவை, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்க முயன்றதாக கூறிய பஷீர், அதிமுக அழிவு பாதையில் செல்வதாக தெரிவித்தார். 

click me!