வெற்றிவேல் அண்ணே ஒரு குட்டி கதை சொல்லட்டுமா? விக்ரம் வேதா பட ஸ்டைலில் லெட்டர் போட்ட திவாகரன் மகன்!

First Published Apr 25, 2018, 6:04 PM IST
Highlights
Jeyanandh Dhivakaran wrote letter to vetrivel


வெற்றிவேல் அண்ணே ஒரு குட்டிகதை சொல்லட்டுமா? என  கூறி வெற்றிவேலுக்கு ஜெயானந்த் திவாகரன் கடிதம் எழுதியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியுடன் திவாகரன் தொடர்பு வைத்துள்ளார் என வெற்றிவேல் தனது முகநூலில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால் கடுப்பான திவாகரன் பதிலடி கொடுத்தார். இதனையடுத்து, ஜெயானந்த் தனது முகநூலில் தன்னிலை விளக்கம் என்ற பெயரில் வெற்றிவேலுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அதில், ''எங்களைப் பற்றி தாங்கள் பதிவிட்டிருப்பது எங்களை கோபப்படுத்தவில்லை. ஆனால், மிகுந்த மன வருத்தத்தை அளித்திருக்கிறது. கழகத்தின் முக்கிய உறுப்பினரான நீங்கள் எங்கள் நிலை உணராமல் இருப்பது எனக்கு வருத்தமே. நாங்கள் எடப்பாடி அணியினரோடு நெருக்கமாக இருக்கிறோம் என்று நீங்கள் கூறியது தவறு. எங்கள் குடும்பத்தைச் சார்ந்த உறவினரை கரூரில் இருந்து வேலூருக்கு மாற்றி பழிவாங்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறார் எடப்பாடி. எங்கள் குடும்ப உறுப்பினர் என்பதால்தானே இந்த நடவடிக்கை. இந்த சம்பவம் நடந்து ஒருவாரம் கூட ஆகவில்லை. இதுபோல பல சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்.

நாங்கள் அரசியலில் உங்களுடன் பயணித்ததால்தானே பாஜக எங்களைப் பணியவைக்க கடந்த 8 மாத காலமாக வருமான வரித்துறை மூலம் எங்கள் குடும்பத்திற்கும், எங்களைச் சார்ந்தோர்களுக்கும் மிகுந்த இன்னல்களையும், இம்சைகளையும் கொடுத்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? 72 மணிநேரம் என் வீட்டில் தங்கி என்னை அடிக்க வருவது போல பாவனைகள் செய்து தவறான வாக்குமூலம் வாங்க நினைத்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? என் நண்பர்களில் ஏராளமானோர் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு 8 மாதங்கள் தாண்டிவிட்டது. பாஜக இன்றுவரை அவர்களை விடவில்லை. அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்கியதற்கு நேர்மையான பதிலும் வரவில்லை. ஆதலால், அவர்கள் தொழில் முடங்கி வாழ்வதற்குப் போராடும் அவலத்தை நீங்கள் அறிவீர்களா? நாங்கள் பலவற்றை சொல்லிக்காட்ட விரும்பவில்லை.

தியாகம் அனைவரிடத்திலும் உள்ளது. அதனை சொல்லிக் காட்ட விரும்பவில்லை. நாங்கள் உங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. நாங்கள் உங்களிடம் எந்தவித பதவியையும் எதிர்பார்க்கவில்லை. நானும், திவாகரனும் டிடிவி தினகரன்தான் முதல்வர் என்று அனைத்து பொதுமேடைகளிலும் இன்று வரை கூறி வருகிறோம். நாங்கள் இதுவரை பொதுமேடைகளில் எந்தவித எதிர்ப்பையும் வெளிப்படுத்தியதில்லை. ஆனால், ஒருசில விஷயங்களில் மாற்றுக் கருத்து இருப்பதையும் மறைக்கவும் இல்லை.

அதிகபட்சமாக நாங்கள் எதிர்பார்ப்பது சக மனிதனுக்கு கொடுக்கும் மரியாதையை மட்டுமே. பல மாதங்களாக மறைமுகமாக, திரைமறைவில் பல இன்னல்களையும், அவமானங்களையும் சந்தித்து வருகிறோம். அதைப்பற்றிக் கூற விரும்பவில்லை. எதற்கும் ஆசைப்படாத எங்களுக்கு கையில் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மரியாதை கொடுத்திருக்கிறீர்கள். ஆனால், ஒன்று மட்டும் நான் நன்கு அறிவேன். யாரோ எழுதிய அறிக்கை உங்கள் பெயர் போட்டு வெளிவந்திருக்கிறது. உங்கள் மனசாட்சிக்கு அது தெரியும் என்று நம்புகிறேன்.

திவாகரனின் தற்போதையை நிலையைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், ஒரு குட்டிக்கதை மட்டும் சொல்கிறேன். 15 மற்றும் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கலீலியோ எனும் விஞ்ஞானி பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்றார். ஆனால், கிறிஸ்தவ சமயத்தினர் சூரியன் தான் பூமியைச் சுற்றுகிறது. பூமி நிற்கிறது என்று நம்பினர். அவர்கள் நம்பிக்கைக்கு எதிராகப் பேசியதாக கலீலியோவை கற்களால் அடித்தனர். பிறகு அவர் இறந்துவிட்டார். கலீலியோ மறைந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்ற உண்மை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபணமானது. அவர் இருக்கும்போது சொல்லிய உண்மை இறந்த பின்பு உலகம் அறிந்தது.

ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 'சின்னம்மா' என்ற ஒற்றை வார்த்தைக்காக நாங்கள் எதையும் பொறுத்துக் கொள்வோம்.'' இவ்வாறு ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.

click me!