மக்கள் ஹீரோஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி – அதிரடி அறிவிப்பு

By manimegalai aFirst Published Nov 22, 2021, 8:04 PM IST
Highlights

ஆந்திர மாநிலத்தில் மூன்று தலைநகரங்களை ஏற்படுத்தும் மசோதாவிற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தற்போது அம்மசோதாவை திரும்பபெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2019-இல் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி , பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதிரடியாக பல திட்டங்களை அறிவிக்கும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மக்கள் ஹீரோவா பார்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் தலைமையிலான அரசு மாநிலத்தில் மூன்று தலைநகரங்களை உருவாக்க வகை செய்யும் மசோதாவுக்கு கடந்த ஆண்டு பேரவையில் தாக்கல் செய்தது. எதிர் கட்சியினரை கடும் அமளிக்கு மத்தியில், அந்த மசோதா பேரவையில் நிறைவேற்றமானது. மாநிலத்தின் நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினத்தையும், சட்டப்பேரவை தலைநகராக அமராவதியையும், நீதித்துறை தலைநகராக கர்னூலையும் அறிவித்திருந்தது ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு.

இந்த மசோதாவிற்கு விவசாயிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல , இந்த திட்டம் வகுக்கப்பட்டதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் மூன்று தலைநகரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை திரும்பப் பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது ஆந்திர அரசு.  

இதற்கு முன்னர், ஜெகன் மோகன் ரெட்டி அரசின் தலைநகர மசோதாவை எதிர்த்து மக்கள் ஹதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் மத்திய அரசும் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் பதில் அளித்த மத்திய அரசு, 'ஒரு மாநிலத்திற்கு தலைநகரம் அமைக்கும் முடிவு என்பது முழுக்க முழுக்க அந்த மாநில அரசு தொடர்புடையது. எனவே இதற்கும் மத்திய அரசுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது,' எனக்கூறியது. ஆந்திர அரசு சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'ஆந்திராவுக்கு ஒரே ஒரு தலைநகராக அமராவதி மட்டுமே இருக்கும். இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சட்டசபையில் வெளியிடுவார்,' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆந்திராவில் 3 தலைநகர்களை அமைக்கும் முடிவில் இருந்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பின்வாங்கியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக இன்று சட்டசபையில் பேசிய ஜெகன்மோகன், 'ஆந்திரப் பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களையும் வளர்ச்சி பெற செய்யும் வகையில், மூன்று தலைநகரங்களை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என கருதினோம். அரசாங்கம் முன்பு அறிமுகப்படுத்திய மசோதாவை திரும்பப் பெறுகிறோம். எந்த குறையும் இல்லாத பிழையில்லாத புதிய மசோதாவை அறிமுகப்படுத்துவோம்,' எனக் கூறினார்.

முந்தைய சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அமராவதியை தலைநகராக மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்காக பல ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!