
சட்டப்படி செயல்படுபவர்களுக்கு மட்டும் தான் விதிகளும், தர்மங்களும். சட்டத்தின்படி செயல்படும் காவலராக இருந்தால் அவர் யாரையும் தாக்கவோ, தண்டிக்கவோ முடியாது. விதிகளின்படி மட்டுமே நடக்க முடியும். அதுவே சட்டத்தை மதிக்காத போக்கிலியாக இருந்தால் அவரது செயல்பாடுகளுக்கு எந்த வரையரையும் கிடையாது. அவர் யாரையும் வேண்டுமானாலும் தாக்கலாம்.... தூக்கலாம் அல்லவா? அதுபோல் தான் பாட்டாளி மக்கள் கட்சியை பழிதீர்க்கும் விஷயத்திலும் நடந்தது. எதிரிகளை பழி தீர்ப்பதில், மேற்குறிப்பிட்ட இரு வகைகளில் ஜெயலலிதா இரண்டாவது ரகம் ஆவார். அதனால் சட்டத்தை மதிக்காமல் கண்மூடித்தனமாக ஆடினார்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான முதலமைச்சர் ஜெயலலிதாவின் பழிவாங்கும் வெறி என்னுடன் அடங்கிவிடவில்லை. எனது கைதுக்குப் பிறகும் அ.தி.மு.க. அரசின் பழிவாங்கல் தொடர்ந்தது. நானும் பாட்டாளி மக்கள் கட்சியின் மற்ற முன்னணித் தலைவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் முன்னெடுத்துச் சென்றார்.
நான் கைது செய்யப்பட்டதற்கு அடுத்த நாளான 01.05.2013 அன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் கைது செய்யப்பட்டது எந்த வகையில் நியாயம் என்றும், பா.ம.க.வுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறை குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா பதில் கூறியே ஆகவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருந்தார்.
3 வழக்குகளில் கைது
இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக அரசு, அடுத்த 2 ஆவது நாளே அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. மாமல்லபுரம் மாநாட்டில் அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்து பேசியதுதான் அவர் செய்த தவறாகும். இந்த வழக்கில் பிணை கிடைத்தாலும் மருத்துவர் அன்புமணி இராமதாசு விடுதலையாகிவிடக் கூடாது என்பதற்காக அவர் மேலும் 2 பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.
மருத்துவர் அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டது, முழுக்க முழுக்க பழிவாங்கும் நோக்கம் கொண்டது என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களைக் காட்ட முடியும். அவர் மே 3 ஆம் தேதி முதன் முதலில் கைது செய்யப்பட்டது, கடந்த 05.05.2012 அன்று நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னியப் பெருவிழாவில் காலம் கடந்து பேசியது தொடர்பான வழக்கில்தான். இந்த விழா தொடர்பாக என் மீது தொடரப்பட்ட வழக்கு குறித்த விவரங்கள் ஓராண்டிற்கும் மேலாக எப்படி எனக்குத் தெரிவிக்கப்படாமல் இருந்தனவோ, அதேபோல்தான் மருத்துவர் அன்புமணி இராமதாசு மீதான வழக்கின் விவரங்களும் அவருக்கு தெரிவிக்கப்படவே இல்லை. மருத்துவர் அன்புமணி இராமதாசைக் கைது செய்யவேண்டும் என்ற எண்ணம் அரசுக்குத் தோன்றியதும், கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கை அவர்கள் தூசுத் தட்டி எடுத்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் மே 6 ஆம் தேதி அவருக்கு பிணை வழங்கப்பட்டது. அன்றே அவர் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2013 ஆம் ஆண்டு சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் காலம் கடந்து பேசியது தொடர்பான இன்னொரு வழக்கில் அன்றே அவர் கைது செய்யப்பட்டார். மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாக்கள் தொடர்பாக, என்மீதும், ஜி.கே.மணி, குரு, திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் மீது தலா இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த இரண்டு வழக்குகளிலுமே நாங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டு, ஒரே நேரத்தில் பிணை பெற்றோம்.
அதிக நாட்கள் சிறையில் அடைக்க சதி
ஆனால், மருத்துவர் அன்புமணி இராமதாசு மட்டும் இந்த இரு வழக்குகளிலும் தனித்தனியாக கைது செய்யப்பட்டார். இதற்குக் காரணம் இரு வழக்குகளிலும் ஒன்றாகக் கைது செய்யப்பட்டால், உடனடியாக பிணை பெற்று விடுதலையாகி விடுவார் என்ற எண்ணம்தான். தனித்தனியாக கைது செய்தால், இருவழக்குகளிலும் தனித்தனியாக பிணை பெறுவதற்கு இன்னும் சில நாட்கள் கூடுதலாக ஆகும். அந்த நாட்களிலும் அவரைச் சிறையில் அடைக்கலாம் என்ற எண்ணத்தில்தான் தமிழக அரசு இவ்வாறு செய்தது. இந்த வழக்கிலும் அவருக்கு உடனடியாக பிணை கிடைத்துவிடக்கூடும் என்பதை உணர்ந்த காவல்துறையினர், அவரை தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கும் நோக்குடன், மூன்றாவது வழக்கைப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மிகவும் விசித்திரமானது. நானும் பாட்டாளி மக்கள் கட்சியினரும் கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், 01.05.2013 அன்று சென்னையில் விடுதி ஒன்றில் மருத்துவர் அன்புமணி இராமதாசு செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.
சென்னையில் பேச்சு; பிரம்மதேசத்தில் வழக்கு
மாமல்லபுரம் மாநாட்டில் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும்விட, அதிக நேரம் பேசியதற்காக மாமல்லபுரம் நீதிமன்றத்தில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், சென்னை எழும்பூரில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அளித்த நேர் காணலில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்திருந்தால், அதற்காக எழும்பூர் நீதிமன்றத்தில்தான் வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும். ஆனால் மருத்துவர் அன்புமணி இராமதாசு நேர்காணல் வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்ததாகக்கூறி, விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரை 15 நாட்கள் காவலில் வைக்க திண்டிவனம் நீதிமன்றம் ஆணையிட்டது. நீதித்துறை வரலாற்றில் சென்னையில் அளிக்கப்பட்ட நேர்காணலுக்காக 125 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள ஒரு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது இதுவே முதல்முறையாக இருக்கும். ஒருவரை பழிதீர்க்கவேண்டும் என்று நினைத்துவிட்டால், அதற்காக தமிழக அரசும் காவல்துறையினரும் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு இதுவொரு உதாரணமாகும்.
பிணையில் விடுதலை
மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்த திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மீதும் எளிதில் பிணையில் வெளிவரமுடியாத அளவுக்கு அடுத்தடுத்து பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய செயல்வீரர்கள் அனைவரையும் ஏதேனும் ஒரு வழக்கில் கைது செய்து, சிறையில் அடைக்கவேண்டும் என்று தமிழக அரசும், காவல்துறையினரும் துடித்ததற்குக் காரணம் பாட்டாளி மக்கள் கட்சியை முடக்கவேண்டும் என்பதுதான்.
தமிழக அரசு மற்றும் காவல்துறையின் பழிவாங்கலுக்கு எதிராக கடுமையான சட்டப் போராட்டம் நடத்திய மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அடுத்தடுத்து 3 வழக்குகளில் பிணை பெற்றார். இதையடுத்து மே 9&ஆம் தேதி மாலை சென்னை புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அன்புமணி இராமதாஸ் மீது போடப்பட்ட வழக்குகளாக இருந்தாலும், என் மீது போடப்பட்ட வழக்குகளாக இருந்தாலும், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகளாக இருந்தாலும் சரி... இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை. அந்த வழக்குகளின் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்கவில்லை. காரணம்... அந்த வழக்குகளில் எந்த உண்மையும் இல்லை; அவை எங்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்குகள் என்பது தான்.
குருவின் இன்றைய நிலைக்குக் காரணமான அன்றைய அடக்குமுறை!
நாளை எழுதுகிறேன்.