பழைய தாலுகா அலுவலகத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது.. அமைச்சர் பொன்முடி..

By Ezhilarasan BabuFirst Published Jul 21, 2021, 11:14 AM IST
Highlights

திமுக ஆட்சியில் வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

திமுக ஆட்சியில் வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூட முயற்சிகள் நடப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு உரிய நிதி வழங்கவும், பதிவாளரை நியமிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.வி. சண்முகம் மனுதாக்கல் செய்திருக்கிறார். 

ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு விழுப்புரம் மாவட்டம் செம்மேடு கிராமத்தில் 70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது, ஆனால் நிலம் ஒதுக்கியும் தற்போது அரசியல் புறக்கணிப்பால் பல்கலைகழகம் பழைய தாலுகா அலுவலகத்திலேயே செயல்படுகிறது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  இந்நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  இது குறித்து விளக்கும் அளித்துள்ளார். அதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் மட்டுமே நியமிக்கபட்டதாகவும், பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு நிதியும் மற்றும் நியமனங்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.

பழைய தாலுகா அலுவலகத்தில் பல்கலைக்கழகம் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது எனவும் கூறிய அவர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை அப்பகுதியில் உள்ள மாணவர்கள் நலன் கருதி அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைத்து,  இணைப்பு பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என்றும்,  இதன் மூலமாக பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட வழி ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 

click me!