ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சனா? என்ன சொல்கிறார் தினகரன்!

By vinoth kumarFirst Published Dec 5, 2018, 10:18 AM IST
Highlights

ஆட்சியையும்... கட்சியையும்... தன் கண் அசைவில் கட்டுப்படுத்தி வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது.

ஆட்சியையும்... கட்சியையும்... தன் கண் அசைவில் கட்டுப்படுத்தி வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது.

 

ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். இதனையடுத்து அவரது மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பில் கூறி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். 

ஆனாலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் இன்னமும் தனது விசாரணையை முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது. கட்சி தொடர்பான விவகாரங்களும் முடிவு எட்டப்படாத நிலையே இருந்து வருகிறது. இரண்டு ஆண்டுகள் முடிந்தும் எல்லாமே மர்மமாகவே இருந்து வருகிறது. 

இந்நிலையில் அ.ம.மு.க கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான தினகரனிடம் பிரபல வார இதழ் சில கேள்விகளை முன்வைத்தது. அதில் ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகி வருகிறது என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள தினகரன் ஆயிரம் வதந்திகளைக் கிளப்புகிறார்கள்; அதையெல்லாம் ஆணையம் விசாரிக்கிறது. எல்லாமே உண்மைக்குப் புறம்பான தகவல்கள். அவர் எப்படி மாரடைப்பால் இறந்தார் என்பதை ஆணையத்திடம் அப்பல்லோ டாக்டர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். எங்களின் பொதுச்செயலாளர் சசிகலா மீது ஏதேதோ குற்றச்சாட்டுகளை எல்லாம் முன்வைத்தார்கள். ஆனால் இது எல்லாமே கட்டவிழித்துவிட்ட பொய் என்பது ஊர்ஜிதமாகி விட்டது. பொய்களுக்கு நீண்டகாலம் உயிர் இருக்காது என்று தெரிவித்தார். 

மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் ஜெயலலிதா தனது கடைசிக் காலத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் அரசியலுக்கு முழுக்குப் போடத் தயாராக இருந்தார் என்றும் ஒரு தகவல் வெளியானதே என்று வினா எழுப்பினார். அதை நீங்கள் சொன்னவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார். அதைச் சொன்ன திவாகரனிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். ஜெயலலிதாவின் கடைசிக் காலத்தில், நான் அவருடன் இல்லை. 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, எங்களைக் கட்சியைவிட்டு நீக்கிய பின்பு 5 ஆண்டுகளாக நான் அவரைச் சந்திக்கவே இல்லை. கடைசியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 25-ல் அவரைப் சந்தித்ததேன். மேலும் இப்படி அவர் யாரிடம் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். 

இறுதியான கேள்வி ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார் என்று வினா எழுப்பினார். சொத்துகளுக்கு யார் வாரிசு என்று தெரியவில்லை; அவர் உயில் எதுவும் எழுதி வைத்துள்ளதாக எதுவும் தெரியவில்லை. மேலும் தனக்கு பிறகு அரசியல் வாரிசாக யாரும் அறிவிக்கவில்லை என்றார். 

click me!