ஜெயலலிதா சட்டத்தை திருத்திய எடப்பாடி... உள்ளாட்சி தேர்தலில் அடிச்சு தூக்க பக்கா திட்டம்..!

By vinoth kumarFirst Published Nov 19, 2019, 5:36 PM IST
Highlights

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், 15 மேயர் பதவிக்கான தேர்தலை கவுன்சிலர்கள் தேர்வு செய்யும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2001-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின் போது மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்தனர். 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது மேயர்கள், பேரூராட்சி தலைவர்கள், நகர்மன்ற தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்யும் வகையில் சட்டதிருத்தம் செய்தது. அதாவது மக்கள் கவுன்சிலர்களை வாக்களித்து தேர்வு செய்வார்கள். கவுன்சிலர்கள் தங்களுக்குள் ஒருவரை மேயராகவோ, நகர்மன்ற தலைவராகவோ, பேரூராட்சி தலைவராகவோ தேர்வு செய்வார்கள்.

இதன் மூலம் ஒரு மாநகராட்சியில் அதிக கவுன்சிலர்களை பெறும் கட்சி மேயர் பதவியை பெறும். இதே போல் தான் நகர்மன்ற தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளும் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் 2011-ம் ஆண்டு மக்கள் நேரடியாக மேயர்களை தேர்வு செய்யும் வகையில் ஜெயலலிதா சட்டத்தை திருத்தி தேர்தலை நடத்தினார். அதே சமயம் 2016-ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது கவுன்சிலர்கள் மேயர்களையும், நகர்மன்ற தலைவர்களையும், பேரூராட்சி தலைவர்களையும் தேர்வு செய்யும் வகையில் அறிவிப்பாணை இருந்தது.

ஆனால் இடஒதுக்கீடு முறையாக இல்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்று திமுக தடை வாங்கியது. இதனால், கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில், டிசம்பர் இறுதி வாரத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை மேயர், நகர்மன்ற தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர்களை எப்படி தேர்வு செய்வது என்று தேர்தல் ஆணையம் முடிவிற்கு வரவில்லை. இதற்கு காரணம் ஆளும் அதிமுக தரப்பிடம் இருந்து இந்த விவகாரத்தில் தெளிவான முடிவுகள் எடுக்கப்படாமல் இருந்தது. 

இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், 15 மேயர் மற்றும் பேரூராட்சி, நகர்மன்ற தலைவர்களை பதவிக்கான தேர்தலை கவுன்சிலர்கள் தேர்வு செய்யும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!