ஜெயலலிதாவை அவமதித்த வழக்கு... கடுப்பான நீதிபதிகள் விஜயகாந்துக்கு கண்டனம்..!

By vinoth kumarFirst Published Jan 20, 2020, 12:32 PM IST
Highlights

கடந்த 2012-ம் ஆண்டு தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் விமர்சித்து பேசினார். இதனையடுத்து, தமிழக அரசு தரப்பில் தேனி நீதிமன்றத்தில் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 

அவதூறு வழக்கை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற விரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் விமர்சித்து பேசினார். இதனையடுத்து, தமிழக அரசு தரப்பில் தேனி நீதிமன்றத்தில் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடர்வதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுக்களை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற அனுமதி கோரினார்.

இதையடுத்து, கடுப்பான நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவில் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறிவிட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது. மேலும், எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் பேசிய பேச்சுக்கள் அவதூறானவையே எனத் தெரிவித்த நீதிபதிகள், எதிர்கட்சி எப்படி செயல்பட வேண்டும் என துணை குடியரசு தலைவர் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி விவாதிக்க நீதிமன்றம் இடமல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

click me!