ஜெயலலிதா சொத்துக்களில் தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published May 27, 2020, 11:48 AM IST
Highlights

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா, தீபக்கை சொத்துக்களின் 2ஆம் நிலை வாரிசுகளாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா, தீபக்கை சொத்துக்களின் 2ஆம் நிலை வாரிசுகளாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. அதேநேரத்தில், ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

மறைந்த  முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவை சேர்ந்த புகழேந்தி என்பவர் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்களான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். 

உயர்நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் நேரில் ஆஜராகி, ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள் என்றும் தங்களை சட்டப்பூர்வமான வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்றும் தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, ஜெயலலிதா ரூ.40 கோடி வருமானவரி பாக்கி வைத்துள்ளதாகவும், அதனால் அவரது போயஸ் கார்டன் இல்லம், நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள சில சொத்துக்களை முடக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்  நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று வெளியிட்டுள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா, தீபக்கை சொத்துக்களின் 2ஆம் நிலை வாரிசுகளாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். 

வேதா இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின் அலுவலகமாக மாற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளனர். மேலும், ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

click me!