
உடல் நலம் குன்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது, கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தல் மற்றும் மறு தேர்தல்களுக்காக அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் கைரேகை வைத்த விவகாரம் பல வகையிலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
வேட்பு மனுக்களில் ஜெயலலிதா வைத்ததாக கூறப்படும் கைரேகை எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம், தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது..
ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தலும் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு மறு தேர்தலும் நடைபெற்றது.
அப்போது, அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கான பி பார்ம் மனுவில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதிலாகக் கைரேகையுடன் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் சுயநினைவில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாகவும், அப்படி இருக்கும் போது அவர் எப்படி கைரேகை வைப்பார் என சர்ச்சை எழுந்தது.
அப்போது ஜெயலலலிதாவை அப்போலோ மருத்துவமனையில் சந்தித்து கைரேகை பெற்ற டாக்டர் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனது முன்னிலையில்தான் கைரேகையை பதித்தார் என விளக்கமளித்தார்.
இதனிடையே திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இதையடுத்து திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
அதில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸுக்கு அதிமுகவின் சின்னம் ஒதுக்குவது தொடர்பான மனுவில் இருந்த ஜெயலலிதாவின் கைரேகையின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது.
இந்த வழக்கில் திருப்பரங்குன்றம் தேர்தல் அலுவலராகப் பணியாற்றிய ஜீவா சாட்சியம் அளித்துள்ளார். தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியும் ஆஜராகியுள்ளார். கடந்த 13ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளரான வில்ஃபிரட் இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது, “வேட்புமனுவில் ஜெயலலிதாவின் கைரேகை வைக்கலாம் என்று அவைத் தலைவர் மதுசூதனன் கொடுத்த கடிதத்தை எந்த அடிப்படையில் ஏற்றுக் கொண்டீர்கள்? அந்தக் கடிதத்தில் ஜெயலலிதாவின் மருத்துவச் சான்றிதழ்கள் இணைக்கப்பட்டிருந்ததா?’ என்பன உள்ளிட்ட கேள்விகளை திமுக வேட்பாளர் சரவணன் தரப்பு வழக்கறிஞர் கேட்க, தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் வில்ஃபிரட் பதில் சொல்ல முடியாமல் திணறினார்.
இந்த வழக்கு ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க... மாற்றத்துக்கான இந்தியா அமைப்பின் இயக்குநர் பாடம் நாராயணன் மற்றும் சமூக ஆர்வலர் கொண்டல்ராவ் ஆகியோர் ஜெயலலிதாவின் கைரேகையின் உண்மைத் தன்மை தொடர்பாகச் சந்தேகம் உள்ளதாக இந்தியத் தலைமை தேர்தல் ஆணையருக்கு மனு அளித்திருந்தனர்.
இந்த இருவரின் மனுவையும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பு செயலாளர் ராஜன் ஜெயின் பெற்றுக்கொண்டார். மேலும், ஜெயலலிதாவின் கைரேகை உண்மையா அல்லது பொய்யா என்பது குறித்தும் அந்தக் கைரேகையை ஏற்றுக்கொண்டது எப்படி என்பது குறித்தும் விளக்கமளிக்குமாறு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் தமிழகத் தேர்தல் ஆணையம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
இந்த நிலையில், திமுக வேட்பாளர் சரவணன் தொடுத்துள்ள தேர்தல் வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதில் ஜெயலலலிதாவை அப்போலோ மருத்துவமனையில் சந்தித்து கைரேகை பெற்ற டாக்டர் பாலாஜி ஆஜராகிறார். இதனால் ஜெயலலிதா கைரேகை வழக்கும், இந்த விவகாரமும் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..