
நிஜ வாழ்க்கையில் நான் நடிப்பதில்லை, அதற்குக் காரணம் நிஜ வாழ்க்கையில் நடிக்க யாரும் எனக்கு சம்பளம் தருவதில்லை என்று மனம் திறந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.
2.0 திரைப்பட இசை வெளியீட்டு விழா துபையில் இன்று நடைபெறுகிறது. மிக பிரமாண்டமாக திட்டமிடப்பட்டுள்ள இந்த விழாவில் பங்கேற்பதற்காக துபைக்கு வியாழக்கிழமை நேற்று வந்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். பிரமாண்டத்தின் இயக்குனர் என்று பெயரெடுத்த ஷங்கரின் இயக்கத்தில் ரூ.400 கோடி செலவில் உருவாகி வருகிறது 2.0 என்ற பிரம்மாண்ட திரைப்படம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார், நடிகை எமி ஜாக்சன் உள்ளிட்ட பிரபலங்களின் கூட்டுப் படைப்பாக இந்தத் திரைப்படம் திரைக்கு வருகிறது. பின்னணிக்கு பலம் சேர்த்திருப்பவர் ஹாலிவுட் புகழ் ஏ.ஆர். ரஹ்மான்.
இந்தக் கூட்டணி காரணத்தால், இந்தப் படம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும்2018 ஜனவரி 25ல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக உள்நாட்டில்தான் இசை வெளியீடுகள் நடைபெறும். ஆனால், உலக அளவில் இந்தத் திரைப்படத்தைக் கொண்டு செல்ல விரும்பி, இதன் இசை வெளியீட்டு விழாவை துபையில் வெள்ளிக்கிழமை இன்று நடத்துகின்றனர்.
இசை வெளியீட்டுக்கு முன்பாக, இத்திரைப்படக் குழு சார்பில் வியாழக்கிழமை நேற்று ஒரு செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டம் துபையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. செய்தியாளர் சந்திப்பே பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, 2.0 குறித்துப் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிலவற்றை வெளிப்படையாகவே பேசினார்.
அப்போது, 2.0 திரைப்படம் இந்தியாவிலேயே மிகவும் போற்றப்படும் ஒரு திரைக்காவியமாக அமையும். இதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இதில் இயக்குநர் ஷங்கர், சமூகத்துக்குத் தேவையான ஓர் அருமையான விஷயத்தைக் கூறியிருக்கிறார். இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளில் இருக்கும் மக்களின் ரசனைக்கு ஏற்பவும் இந்தப் படம் இருக்கும் என்று முதலில் 2.0 குறித்து அறிமுகப் படுத்தினார்.
ஏற்கெனவே அரசியலுக்கு வருவார் என்று இந்தியாவையே பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியிருக்கும் ரஜினி காந்த், திடீரென தனது நடவடிக்கைகளை மட்டுப் படுத்திக் கொண்டார். அந்த ‘சைக்கிள் கேப்’பில் உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளே புகுந்து, டிவிட்டர் மூலமே ஊடகங்களைத் தட்டியெழுப்பி தன் பக்கம் கவனத்தை ஈர்த்துவிட்டிருக்கிறார். அதன் மூலம் அவர் இப்போது அரசியல் அரங்கில் வளர்ந்துவருகிறார்.
இந்நிலையில், ரஜினி ஏன் இவ்வளவு யதார்த்தமாக இருக்கிறார்...? இதற்கு என்ன காரணம்? என்று செய்தியாளர் ஒருவருக்குத் தோன்ற அதை ரஜினியிடம் கேட்டார். அதற்கு ரஜினி காந்த், "நிஜ வாழ்க்கையில் நான் நடிக்க விரும்பவில்லை... ஏனென்றால், நிஜ வாழ்க்கையில் நடிப்பதற்கு எனக்கு யாரும் சம்பளம் கொடுப்பதில்லை” என்று கூறினார்.
சம்பளம் கொடுத்தால்தான் நடிக்க முடியும். சம்பளம் கொடுக்காத பட்சத்தில் நான் ஏன் நடிக்கப் போகிறேன் என்று செய்தியாளர்களிடம் மனம் திறந்த ரஜினி காந்த், அரசியல் வானில் எப்படி ஜொலிக்கப் போகிறார்...! பார்க்கத்தானே போகிறோம்!