அமரர் ஜெயலலிதா பரிதாபங்கள்!: சமாதியில பூ வைக்க மாட்டேங்கிறாங்க, சிலையை வேஷ்டியால மூடுறாங்க. உண்மைதானே?!...

By thenmozhi gFirst Published Nov 16, 2018, 3:31 PM IST
Highlights

சில விஷயங்களை வார்த்தைகளால் விளக்கிடவே முடியாது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதில் மிக முக்கியமானது ‘ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் அவரிடம் அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் காட்டிய பவ்யம்!’. 

சில விஷயங்களை வார்த்தைகளால் விளக்கிடவே முடியாது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதில் மிக முக்கியமானது ‘ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் அவரிடம் அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் காட்டிய பவ்யம்!’. ஜெயலலிதா இருக்கும் திசை நோக்கி பார்க்க கூட தைரியமில்லாமல் , அந்த அச்சத்திற்கு ‘மரியாதை! விசுவாசம், அடக்க உணர்வு’ எனும் போர்வைகளை போர்த்தி இவர்கள் பம்மிய பம்மல்கள் அசாதாரணமானவை. 

அப்பேர்ப்பட்ட ஜெயலலிதா மறைந்த பின், இப்போது அவரை கண்டுகொள்ளாமல் அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் உதாசீனப்படுத்துவதாக குரல்கள் வெடிக்கின்றன தொண்டர்களிடம் இருந்து. 

இதற்கு உதாரணம் தந்து பொங்குகிறார்கள் இப்படி....”அம்மா சமாதி, கருணாநிதி சமாதி ரெண்டுமே மெரீனா கடற்கரையில்தான் இருக்குது. கருணாநிதி சமாதியில தினம் தினம் விதவிதமா பூ அலங்காரம் பண்றாங்க. அவரோட எழுத்து திறமைக்கு மரியாதை காட்டி பெரிய பேனா மாடலை அவர் சமாதியில் அமைச்சாங்க. அடிக்கடி ஸ்டாலின், கனிமொழி, தமிழரசு, அழகிரி குடும்பத்தினர்ன்னு அவரோட வாரிசுகள் அங்கே போய் நின்னு கண்ணீர் சிந்தி தங்களோட அன்பை காட்டிட்டே இருக்கிறாங்க. பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு தரவேண்டியது அப்பாவின் கடமை. அதை செய்த கருணாநிதிக்கு அவரோட வாரிசுகள் நன்றி காட்டுறாங்க. 

ஆனால் யாரோ பெற்ற பிள்ளைகளை முதலமைச்சர்களாகவும், துணை முதல்வராகவும், அமைச்சர்களாகவும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், வாரியத்தலைவர்கள், மேயர்கள்ன்னு பலப்பல அதிகாரம் மிகு பதவிகளில் உட்கார வெச்சு வாழ்க்கை கொடுத்தவர் அம்மா ஜெயலலிதா. அவங்க கொடுத்த வாய்ப்பால்தான் இன்னைக்கு எங்க கட்சியின் பல நூறு பேர் பெறும் கோடீஸ்வரர்களாகவும், பல்லாயிரம் பேர் பெரும் லட்சாதிபதிகளாகவும் வாழ்ந்துட்டு இருக்கிறாங்க. 

ஆனா இவங்களெல்லாம் அந்த தெய்வத்துக்கு நன்றியோட இருக்கிறாங்களான்னு பார்த்தா சத்தியமா இல்லை. அதே மெரீனாவில் எம்.ஜி.ஆர். சமாதியின் அருகில் இருக்கிற அம்மா சமாதியில் பூவும் கிடையாது, ஒண்ணும் கிடையாது. மணி மண்டபம் கட்டுறோம்னு சொல்லி தடுப்பு சுவர் அமைச்சிட்டாங்க. அட அரசு செலவில் மணிமண்டபம் கட்டுங்கய்யா வேண்டாமுன்னு சொல்லலை. ஆனா அதுவரைக்கும் உங்க செலவில், அம்மா சமாதி அருகே அவரோட பெரிய போட்டோ ஒன்றை வெச்சு, தினமும் பெரிய மாலைகளை போட்டுவிடலாமில்லையா! ஒரு மாசத்துக்கு ஒரு மாவட்டமுன்னு ஒதுக்கி பண்ணினாலும் கூட காலாகாலத்துக்கும் இந்த சிறப்பை பண்ணலாமே. அம்மாவால் நீங்க சம்பாதிச்சிருக்கிற கோடிகளில் இருந்து சில நூறுகளை அவருக்காக செலவு செய்ய கூடாதா? அதுக்கு கூட தகுதியில்லாம போயிட்டாங்களா அந்த தெய்வம்!

இந்த கொடுமை மட்டுமாய்யா நடக்குது? ராயப்பேட்டையில உள்ள தலைமை அலுவலகத்தில் அம்மாவுக்கு சிலை வைக்கிறேன்னு சொல்லி நடக்குற கூத்து சாதாரணமானதா? அம்மா சிலைன்னு சொல்லி ஏதோ ஒரு லேடி முகச்சாயல்ல ஒரு சிலையை நிறுவுனாங்க. தொண்டர்கள் அழுது கதறி கூச்சல் போட்டதும் ஆமையா நகர்ந்து அதை அகற்றிட்டு வேறு சிலை வெச்சாங்க சமீபத்துல. அந்த சிலையை அ.தி.மு.க.வுல கோலோச்சுற கோமான்கள் இருவரும் திறந்து வைக்கும் முன், சாதாரண வேஷ்டியை வெச்சு மூடி வெச்சிருந்தாங்க.

எந்த அம்மாவின் காலடியில் தவமிருந்தாங்களோ அந்த அம்மாவின் சிலையை இப்படியா மூடி வைக்கிறது!? அம்மா விஷயத்தில் இவங்க செய்யும் அலட்சியங்களுக்கு ஒரு அளவேயில்லையா?” என்று பொங்குகின்றனர் தொண்டர்கள். 

ஆனால் இதையெல்லாம் மறுக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளோ “உணர்ச்சிவசப்பட்டும், தி.மு.க.வினரின் தூண்டுதலாலும் தேவையில்லாமல் பேசுகின்றனர் சிலர். அவர்களெல்லாம் அம்மாவின் தொண்டர்களே இல்லை. இந்த அரசாங்கத்தை நடத்தும் எடப்பாடியாரும், ஓ.பி.எஸ்.ஸும் வார்த்தைக்கு வார்த்தை இதை ‘அம்மா அரசு’ என்றுதான் அழைத்து மரியாதை செய்கிறார்கள். அம்மாவுக்கு அவரது நினைவிடத்தில் பெரும் பொருட்செலவில் மணிமண்டபம் கட்டி வருகிறார்கள். அதற்காகத்தான் அந்த இடத்தில் சுவர் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு தவறா?

சிலையை திறக்கும் முன்பாக அதை மூடி வைப்பது எல்லா தலைவர்களின் சிலைகளுக்கும், எல்லா இடங்களிலும் நடப்பதுதான். இதில் என்ன குற்றம் கண்டுபிடிக்கிறார்கள்?” என்று அலுப்பான வார்த்தைகள் வருகின்றன.

click me!