
அதிமுகவின் தலைமையகத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை அமைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஜெ. பிறந்த நாள் அன்று அவரது சிலை திறக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
அதிமுகவின் தலைமை அலுவலகம் சென்னை, ராயப்பேட்டையில் அமைந்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தின் முகப்பில் கட்சியைத் தோற்றுவித்தரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். சிலை அமைக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், அந்த படிக்கட்டுகள் நேற்று திடீரென அகற்றப்பட்டன. படிக்கட்டுகள் அகற்றப்பட்டது குறித்து தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகிலேயே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை அமைக்கப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அந்த படிக்கட்டுகள் அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் சிலை அமைக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24 ஆம் தேதி வர உள்ளது. அன்றைய நாளில் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்படும என்று தகவல் வெளியாகி உள்ளது.