ஜெயலலிதா கல்லறைக்கு போனால் காரியம் ஜெயிக்காது... ஆளுங்கட்சி வி.ஐ.பி.க்களின் விபரீத சென்டிமெண்ட்..!

By Vishnu PriyaFirst Published Mar 28, 2019, 1:40 PM IST
Highlights

வேட்பாளரை அவரது ஜாதகத்தை பார்த்து செலக்ட் செய்தது மட்டுமில்லாமல், ஒவ்வொரு விஷயத்திலும் ஜோஸியம் பார்த்தே தேர்தலை அணுகுவதுதான் ஜெயலலிதாவின் அரசியல். அவர் இருக்கும்போதே நாமினேஷனுக்கு முன்பாக ‘கழகமே கோயில்! அம்மாவே தெய்வம்’ என்று மானசீகமாக வணங்கிவிட்டுதான் கையெழுத்தே போடுவார்கள்.

யானைக்கு தும்பிக்கை உண்டு! என்று விளக்குவதற்கு சமமானது ஜெயலலிதா தன் கட்சியையும், இந்த மாநிலத்தையும் அரசாண்ட போது அவரைக் கண்டு அ.தி.மு.க.வினர் நடுநடுங்கிக் கிடந்த சம்பவங்கள். சொல்லப்போனால் அது ஒரு தேச உண்மை! அதில் மாறுபட்ட கருத்தே கிடையாது. 

ஆனால், யானைக்கும் அடி சறுக்கும்! என்பது போல், பெண் சிங்கம் போல் வாழ்ந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் மீது வைத்திருந்த பயத்தை, பற்றினை, மரியாதையை, அபிமானத்தை, அன்பை எந்தளவுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மறந்திருக்கிறார்கள், அலட்சியப்படுத்துகிறார்கள் என்பதை தினம் தினம் பல விஷயங்கள் அடித்துச் சொல்லிக் கொண்டுள்ளன. ஆனால் அதைவிட மோசமாக, ’அம்மாவின் சமாதிக்கு போய் வணங்கிவிட்டு துவக்கினால் அந்த காரியம் ஜெயிக்காது.’ என்று ஒரு நெகடீவ் செண்டிமெண்டை அந்த கட்சியின் சீனியர் நிர்வாகிகளே முடிவெடுத்து, அதை ஃபாலோவும் செய்வதுதான் ஜெயலலிதாவுக்கு எதிராக சொந்தக் கட்சியினரே நிகழ்த்தும் அக்கிரமங்களில் ஒன்று! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  இதுபற்றி விவரிக்கும் அவர்கள் “பகுத்தறிவு எனும் அடிப்படையில், வாழ்க்கையில் செண்டிமெண்டுகளுக்கு எதிராக அரசியல் செய்தவர்கள் தி.மு.க.வினர். அப்பேர்ப்பட்ட கருணாநிதியே கடைசி பத்து வருடங்களில் சில விஷயங்களில், நம்பிக்கைகளில் அட்ஜஸ்ட் செய்து கொள்ள பழகினார். அவரது மகனும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலினோ கேட்கவே வேண்டாம். கருணாநிதியின் கோபாலபுர வீட்டில் சாய்பாபா வைத்து வணங்குமளவுக்கு நிலைமை மாறியுள்ளது. அந்த ஸ்டாலின், தன் வேட்பாளர்களை அறிவிக்கும் முன்பாக கோபாலபுரத்தில் அப்பாவின் படத்துக்கு முன் லிஸ்டை வைத்து வணங்கிவிட்டும், மெரீனாவில் அவரது கல்லறையில் வைத்து வணங்கிவிட்டும் வந்தே அறிவித்தார். 

ஆனால்! வேட்பாளரை அவரது ஜாதகத்தை பார்த்து செலக்ட் செய்தது மட்டுமில்லாமல், ஒவ்வொரு விஷயத்திலும் ஜோஸியம் பார்த்தே தேர்தலை அணுகுவதுதான் ஜெயலலிதாவின் அரசியல். அவர் இருக்கும்போதே நாமினேஷனுக்கு முன்பாக ‘கழகமே கோயில்! அம்மாவே தெய்வம்’ என்று மானசீகமாக வணங்கிவிட்டுதான் கையெழுத்தே போடுவார்கள். அப்பேர்ப்பட்ட அ.தி.மு.க.வினர், இப்பவும் ‘அம்மாவின் வழி நடக்கும் ஆட்சி இது’ என்று சொல்லிக் கொள்பவர்கள், சென்டிமெண்ட் முழுவதுமாக ஜெயலலிதாவை புறக்கணித்திருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. 

வேட்பாளர் அறிவிக்கும் முன்போ, நாமினேஷன் முன்போ, கழக ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் பிரசாரத்தை துவக்கும் முன்போ ஜெயலலிதாவின் சமாதியை சென்று ஒரு ஃபார்மாலிட்டிக்கு கூட வணங்கவில்லை. கேட்டால்....அம்மாவின் சமாதியை வணங்கினால் அந்த காரியம் சுபமாய் முடியாது! என்று சீனியர்களே ஒரு சென்டிமெண்டை கிளப்பியுள்ளதாக தகவல் வருகிறது. 

ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்த பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தில் போராடி, பின் மதிப்பை சமரசம் செய்து இணைந்து பதவியை பெற்றாலும் இன்னமும் பழைய உச்சத்துக்கு வர முடியவில்லை. ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் கலந்து கொண்ட பல முக்கிய நிர்வாகிகள் உடல் சுகவீனம், மயக்கம் என்று பாடாய்ப் பட்டுவிட்டார்கள். எனவே எந்த ஒரு நல்ல காரியம் துவக்கும் முன் அம்மாவின் சமாதிக்கு போக வேண்டாம்! என்று அக்கட்சியினர் முடிவெடுத்திருப்பதாக தகவல். 

அக்கட்சியை சேர்ந்த, பதவியிலிருக்கும் நபர்கள்தான் இப்படி செய்கிறார்களே தவிர, தொண்டர்கள் இப்பவும் சமாதிக்கு வந்து கண்ணீர் விடத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு அம்மா இன்னமும் ஏகபோக ராசிதான்!ஆனால் தினகரன் சமீபத்தில் ஜெ., சமாதிக்கு சென்று மலர் தூவி வணங்கி, அ.தி.மு.க தொண்டர்களிடம் தன்னை நல்லவராக்கி கொண்டது தனி டச். ” ஹும்! இப்பல்லாம் அம்மான்னா சும்மாதான் போல ஆளுங்கட்சிக்கு.

click me!