
சேலத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்களில் ஜெயலலிதா படங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இது ஜெயலலிதா விசுவாசிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது அம்மாவின் அரசு; அம்மா வழி நடத்தும் அரசு என்று மூச்சுக்கு மூந்நூறு தடவை கூறினாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடம் பெறும் கட் அவுட்களில் அண்மைக்காலமாக ஜெயலலிதா படங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இது ஜெயலலிதா விசுவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 26 ஆம தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் வந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி, சேலம் அண்ணா பூங்கா முதல் புதிய பேருந்து நிலையம், 5 ரோடு, 3 ரோடு பகுதிகளில் பிரம்மாண்டமான பேனர்கள், விளம்பர தட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. சாலையின் இரு புறங்கள் மற்றும் செண்டர் மீடியன்களிலும் வைக்கப்பட்டுள்ளன.
சேலத்தில் வைக்கப்பட்டுள்ள பல கட் அவுட்டுகளில் எம்.ஜி.ஆர். படம் அச்சிடப்பட்டுள்ளது. கட் அவுட்டின் ஒரு மூலையில் பெயரளவுக்கு ஜெயலலிதா படம சிறியதாக அச்சிடப்பட்டுள்ளது. பல இடங்களில் ஜெயலலிதா படம் கூட இல்லாமலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்ச்ர எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் இந்த பேனர்களை, அம்மா பேரவையினரே வைத்துள்ளதுதான் வேடிக்கையாக உள்ளது என்று அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் தனித்தனி கட் அவுட்களை வைத்த தொண்டர்கள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை புறக்கணித்துள்ளனர்.