
சென்னை வந்துள்ள, தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் 3-வது அணி பற்றி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான சந்திரசேகர ராவ்; பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் அல்லாத கூட்டாட்சி முன்னணி என்னும் மூன்றாவது அணியை தேசிய அளவில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியாக உள்ள திமுகவின் ஆதரவைப் பெறுவதற்கு, இன்று மதியம் சந்திரசேகரராவ் சென்னை வந்தார். சென்னை வந்த அவர், கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்குச் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
இதனைத் தொடர்ந்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகம் வந்துள்ள, சந்திரசேகரராவ், நாளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனையும் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.