கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிட்டதே..! மைத்ரேயனின் வருத்தத்துக்கு நட்பின் பதில்...!

Asianet News Tamil  
Published : Nov 18, 2017, 09:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிட்டதே..! மைத்ரேயனின் வருத்தத்துக்கு நட்பின் பதில்...!

சுருக்கம்

jayalalitha house is temple for admk party men but its now under looters maitreyan mps facebook debate

கடந்த வாரம் வியாழக்கிழமை துவங்கிய வருமான வரி சோதனைகள் ஐந்து நாட்களில் முடிந்தது என்றாலும், ஐடி., சோதனை என்ற அதே பரபரப்பு இன்னமும் தணியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது வருமான வரித் துறை. வெள்ளிக்கிழமை நேற்று இரவு ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனுக்குள் நுழைந்த வருமான வரித் துறையினர், திடீர் சோதனை மேற்கொண்டனர். செய்தி பரவியதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தினகரன் ஆதரவாளர்கள் குவிந்து போராட்டம் நடத்த, அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்த சோதனை குறித்து கேள்விப் பட்டதும், உடனே ஜெயா டிவி.,யை நிர்வகித்து வரும் விவேக் ஜெயராமன் உள்ளிட்டோர் அங்கே விரைந்து வந்தனர். ஜெயலலிதாவின் தனி அறையில் மட்டும் சோதனைக்கு அனுமதிக்காமல், மற்ற அறைகளில் சோதனை நடத்த அனுமதித்துள்ளனர். இந்த சோதனைகள் நீதிமன்ற அனுமதி பெற்று நடத்தப் பட்டதாக வருமான வரித்துறை விளக்கம் அளித்திருந்தது. 

முன்னதாக, ஜெயா டிவி., குறித்த சோதனையின் போது, போயஸ் கார்டன் வளாகத்தில் ஒரு தேடல் நடத்தப் பட்டது. ஆனால் இம்முறை நேரடியாக உள்ளே சென்று சோதனைகள் நடத்தப் பட்டுள்ளன. ஜெயலலிதா வாழ்ந்த வீட்டுக்கு அவரது அண்ணன் மகளான தீபா சொந்தம் கொண்டாடுகிறார். அதிமுக.,வினரோ அது அம்மா வாழ்ந்த இடம், அது அதிமுக.,வினரின் கோயில் என்கின்றனர். அரசோ, அதனை ஜெ., நினைவில்லம் என்று அறிவித்தது. 

இத்தகைய பின்னணியில் இந்த திடீர் சோதனை பெரும் பரபரப்பைக் கிளப்பியது. முதல்வரும், துணை முதல்வரும் தங்களை ஆளாக்கிய தலைவி வாழ்ந்த வீட்டில் சோதனை நடப்பதை அனுமதிப்பதா என்று தினகரன் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். 

இந்த சோதனை குறித்து பல கருத்துகள் அப்போதே பரவினாலும், கண்டனங்கள் பல தெரிவிக்கப்பட்டாலும், அதிமுக.,வினர் பலரோ அது அம்மா வாழ்ந்த கோயில், அதில் சோதனையா என்று வருத்தம் தெரிவித்தனர். 

இதனை வெளிப்படுத்தும் விதமாக, அதிமுக., எம்.பி., மைத்ரேயன் தனது பேஸ்புக் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். அதில்,  “காரணம் என்னவாக இருந்தாலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் சோதனை என்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் அம்மாவின் இல்லம் ஒரு கோயில்.” - என்று குறிப்பிட்டார். 

அவரது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், சிலர், கடவுள் இருந்த வீட்டில் களவாணிகள் இருந்ததால் இந்த நடவடிக்கை சரியே... என்றும்,  கோயில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாதல்லவா? ஆனால் ஆகிவிட்டதே! என்றும்,  தவறு நடந்ததால் "சீக்கியர்களின் தங்க கோவிலுக்குள்" ராணுவம் செல்லவில்லையா என்றும், தெய்வம் வெளியே போய்விட்டது. தெய்வமில்லாத கோயில் பாழடைந்த கட்டடம் தான் "கலங்காதீர்'  என்றும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். 

யாருமே வாய் திறக்காத நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான மைத்ரேயன் எம்.பி., இவ்வாறு தனது கருத்தைப் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுதியிருக்கிறது. 

PREV
click me!

Recommended Stories

தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!