
கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா புஷ்பா, முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பல்வேறு பேட்டிகளை அளித்து வந்தார். எதிரணியாக செயல்பட்டு வந்த அவர், தற்போது மீண்டும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.
கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து வெளிப்படையாக யாரும் தெரிவிக்கவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வந்தனர். சிலர், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில் அதிமுகவை பற்றி விமர்சனம் செய்து வந்த சசிகலா புஷ்பா எம்பி, தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த சம்பவத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவரது உடல் நிலை பற்றி எவ்வித தகவலும் வெளிப்படையாக யாரும் கூறவில்லை.
எனவே இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, உண்மை தன்மையையும், வெளிப்படையான மருத்துவ அறிக்கையை புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.