ஜெயலலிதா மரணம்... அவிழாத மர்ம முடிச்சுகள்... ஓ.பி.எஸுடன் முடிவு..?

By vinoth kumarFirst Published Jan 24, 2019, 3:59 PM IST
Highlights

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவிடம் விசாரணை நடத்தும் திட்டமில்லை என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி 24ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவிடம் விசாரணை நடத்தும் திட்டமில்லை என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி 24ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் 2017 செப்டம்பர் மாதம் 25-ம் தேதி அமைக்கப்பட்டது. 

ஆணையம் சார்பில், ஜெயலலிதா உறவினர்கள், சசிகலா உறவினர்கள், ஐஏஎஸ்., ஐபிஎஸ். அதிகாரிகள், அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. இந்த விசாரணையில் தற்போது வரை ஜெயலலிதா மேல் சிகிச்சைக்கு வெளிநாட்டிற்கு செல்லாமல் அழைத்து செல்லாமல் தடுத்தது யார் என்று உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆஜராவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அது வரும் 29-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர் ஆஜராகும் நாளுடன் விசாரணையை முடித்துக் கொள்வதாக ஆணையம் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதேபோல் சசிகலா, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவிடம் விசாரணை நடத்தும் முடிவை கைவிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விசாரணையை முழுமையாக முடிக்காமல் பிப்ரவரி 24ம் தேதி ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையே ஆணையத்தின் இந்த முடிவிற்கு சசிகலா தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சசிகலா தரப்பு வலியுறுத்தி உள்ளது. 

click me!