
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என நடிகர் ஆனந்த்ராஜ் கூறினார்.
அதிமுகவில் குடும்ப அரசியல் இருக்காது என டி.டி.வி.தினகரன் கூறுவதை எப்படி நம்புவது என நடிகர் ஆனந்தராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
எந்த நோக்கத்துக்காக அதிமுக என்னும் இயக்கத்தை எம்ஜிஆர் தொடங்கினாரோ, அந்த கொள்கைகளையும், நோக்கத்தை ஜெயலலிதா கடைபிடித்து கட்டி காப்பாற்றி வந்தார். ஆனால், அதிமுக தற்போது ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி கொண்டது.
தற்போது, அதிமுகவில் எந்த குடும்பத்தினரின் தலையீடும் இருக்காது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதை எப்படி ஏற்றுக்கொள்வது?
இதற்கு ஒரே தீர்வும், நிரந்தர தீர்வுமாக உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெறுபவரிடம் கட்சியையும், கட்சியின் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
122 எம்எல்ஏக்கள் ஒரு குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது மக்கள் விரோதமாக உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு விஷயத்தில் சபாநாயகர் தனபால் தனது கடமை தவறிவிட்டார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர வேண்டும். மக்களுக்கு ஏற்படுள்ள சந்தேகத்தை உடனடியாக நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.