டெல்லி செல்லும் ஆளுநர் ரவி..? விரைவில் திமுக அரசு டிஸ்மிஸ்- பரபரப்பை கிளப்பும் ஜெயக்குமார்

By Ajmal Khan  |  First Published Jun 21, 2023, 1:29 PM IST

தமிழக ஆளுநர் ரவி டெல்லி செல்ல இருப்பதாகவும், விரைவில் திமுக அரசு டிஸ்மிஸ் என்ற செய்தியும் வரப்போகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.


அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்காததை கண்டித்தும், விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசுக்கு  கண்டனம் தெரிவித்தும் போராட்ட நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.இதனையடுத்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் சென்னை மற்றும் சென்னை புறநகரை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

Latest Videos

undefined

இந்த ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் ஓடும் என சொன்னார்கள், ஆனால் சாக்கடை தான் ஓடுகிறது. இரண்டு நாள் மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கியது, மழை நீர் வடிகால் எல்லாம் என்ன ஆனது என கேள்வி எழுப்பினார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை, டெல்லிக்கு சென்று வடையும், சுண்டலும் தான்  சாப்பிட்டு விட்டு வருகிறார்கள் என தெரிவித்தார்.  அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை எல்லாம் ரத்து செய்து மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.  

செந்தில்பாலாஜி கைதுக்கு ஏன் முதலமைச்சர் இவ்வளவு பதற்றமடைய வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், செந்தில்பாலாஜி வாயை திறந்தால் திமுகவில் பாதிபேர் சிறைக்கு செல்வது உறுதி என தெரிவித்தார். திமுக ஆட்சியில் என்னையும் தான் கைது செய்தார்கள். மாத்திரை, உணவு எடுத்துக்கொள்ள கூட அனுமதிக்கவில்லை, சென்னையில் பிறந்த எனக்கே சென்னையை சுற்றி காண்பித்தார்கள். இதற்காக நான் என்ன அழுதேனா என கேள்வி எழுப்பியவர், வழக்குகளுக்கெல்லாம் அஞ்சுகின்ற இயக்கம் அல்ல அதிமுக என கூறினார்.  தமிழர ஆளுநர் ரவி டெல்லிக்கு செல்லவுள்ளதாக தகவல் வருகிறது, விரைவில் திமுக அரசு டிஸ்மிஸ் என்ற செய்தி வரவுள்ளது. அந்த செய்தி தான் தமிழக மக்களுக்கு தீபாவளி என தெரிவித்தார். ஏற்கனவே ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டது,

மீண்டும் ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்படும் என கூறினார்.  அவரை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன், செந்தில்பாலாஜி ஒரு கைதி என்றும் பாராமல், தயவு செய்து எதுவும் சொல்லிவிடாதே என கண்ணீர் வடிக்காத குறையாக முதலமைச்சர் ஸ்டாலின் கெஞ்சியதாக பேசினார். ஆர்பாட்டம் முடிந்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஊழல் கட்சி என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சொன்ன கருத்தை வரவேற்பதாகவும், தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, மற்ற கட்சிகளுக்கு சீட் ஒதுக்கும் இடத்தில் நாங்கள் தான் இருப்போம் என தெரிவித்தார்.அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் எனவும் கூறினார்.
 

click me!