
தினகரனை கட்சியில் இருந்து விலக்க ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், யாருடைய பின்னணியிலும் அதிமுக இல்லை எனவும் முதலமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா அணி ஒ.பி.எஸ் அணி என இரண்டாக பிரிந்தது. பின்னர், சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார்.
சிறைக்கு செல்லும் முன் எம்.எல்.ஏக்களை அழைத்து பேசி எடப்பாடியை முதல் நிலை வேட்பாளராகவும் தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்து விட்டு சென்றார்.
தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை விவகாரத்தில் ஒ.பி.எஸ் தரப்பு குடைச்சல் கொடுக்கவே சின்னம் முடங்கியது.
இதையடுத்து முடங்கிய சின்னத்தை மீட்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றாக கூறி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், எடப்பாடி தலைமயிலான அமைச்சரவை ஒ.பி.எஸ்சுடன் கூட்டு சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க திட்டமிட்டது.
இதனிடையே தற்போது தினகரன் ஜாமில் வந்து கட்சியில் தொடர்ந்து செயலாற்றுவேன் எனவும் சசிகலாவுடன் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் 17 பேர் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
ஒன்றரை மணிநேர ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சருடன் 19 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெயக்குமார் கூறியதாவது:
கட்சி நலனுக்காகவும் ஆட்சி நலனுக்காகவும் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து விலக்குவதாக அறிவித்தோம்.
அப்போது கட்சியில் இருந்து தான் விலகி கொள்வதாக அறிவித்திருந்தார். அதன்படி அதே நிலையில் தினகரன் நிற்க வேண்டும். தற்போது வந்து கட்சியில் மீண்டும் நிலைப்பேன் என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.
எக்காரணத்தை கொண்டும் அதிமுகவினர் தினகரனை சென்று சந்திக்க மாட்டோம்.
தற்போது எடப்பாடி தலைமையிலான ஜெயலலிதாவின் ஆட்சி நல்லமுறையில் நடைபெற்று வருகிறது.
தற்போதைய ஆலோசனையில் தினகரனை நீக்கியதில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.
சசிகலா மற்றும் தினகரன் பின்னணியில் அதிமுக இல்லை. யாருடைய பின்னணியிலும் இல்லை. அவர்கள் சார்ந்த ஆட்சி இங்கே நடக்கவில்லை. தினகரன் தலையீடு இல்லாமல் ஆட்சி நடத்துவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.