"ஜெயக்குமார் ஜெயில்ல இருந்தா அதிமுகவுக்கு மகிழ்ச்சிதான்..!" பற்றவைக்கும் சேகர் பாபு..!

By manimegalai aFirst Published Feb 27, 2022, 6:32 PM IST
Highlights

ஜெயக்குமார் கைதால் அதிமுகவினர் யாரும் வருத்தம் அடையவில்லை என்றும், அவரால் பாதிக்கப்பட்ட அதிகமான அதிமுகவினர் தற்போது மகிழ்ச்சியோடு இருப்பதாக சேகர்பாபு தெரிவித்தார்

 நகர்புற உள்ளாட்சித் தேர்தலின் போது  வாக்குச்சாவடியில் தி.மு.க-வினர் கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக தகவல் வெளியானது.அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுக கழக கண்மணிகள் அங்கே நின்று கொண்டிருந்த தி.மு.க பிரமுகரைப் பிடித்து தாக்கியதோடு அவரை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.பின்னர் பாதிக்கப்பட்ட நரேஷ் என்ற தி.மு.க பிரமுகர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அதேபோல அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி அந்த வழங்கிலும் மீண்டும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.இந்த இரண்டு வழக்கிலும்  ஜாமின் கிடைத்து வெளியே வந்து விடுவார் என அதிமுகவினர் நினைத்திருந்த நிலையில்,   5 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 கிரவுண்ட் தொழிற்சாலையை  ஜெயக்குமார் அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன் ஆகியோர் மிரட்டி அபகரித்துக் கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாளை(பிப்.28) அதிமுக ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.  


 அதிமுக ஆர்பாட்டம் நடத்துவது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காழ்ப்புணர்ச்சியுடன் எந்தவித வழக்கும் தமிழக அரசு பதிவு செய்யப்படவில்லை என்றும், ஒரு தனி நபருக்காக அதிமுக போராடுவதற்கு பதிலாக மக்கள் பிரச்சினையை முன்வைத்து போராடினால் திமுக அதை வரவேற்கும் என தெரிவித்தார். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், ஜெயக்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது  சட்டரீதியான நடவடிக்கை தான் என கூறியவர், ஜெயக்குமார் கைதால் அதிமுகவினர் யாரும் வருத்தம் அடையவில்லை என்றும், அவரால் பாதிக்கப்பட்ட அதிகமான அதிமுகவினர் தற்போது மகிழ்ச்சியோடு இருப்பதாக சேகர்பாபு தெரிவித்தார்.

யார் மகிழ்ச்சி அடைந்தார்களோ இல்லையோ அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையில்  மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. அதிமுகவின் கோட்டையாக வட சென்னை இருந்த போது அதில் முக்கிய பங்காற்றியவர்கள்  மதுசூதனன், ஜெயக்குமார், சேகர்பாபு, வெற்றிவேல் ஆகிய நான்கு  பேரையும் தான் குறிப்பிடுவார்கள். இதில் யார் பெரியவர்கள் என்ற போட்டி இவர்களுக்குள் ஏற்பட்டது. 2006 ஆம் ஆண்டுகளில் திமுக அரசுக்கு  எதிராக  அதிகமான போராட்டங்களை நடத்தியவர் யார்  என்றால் அது சேகர்பாபு தான். அந்த அளவிற்கு ஜெயலலிதாவின்  நம்பிக்கைக்குரியவராக இருந்தார். இதனால் ஜெயக்குமார், சேகர்பாபுக்கு இடையே அதிகாரம் மற்றும் எல்லை போட்டி ஏற்பட்டது. அப்போது தான் யார் கண் பட்டதோ தெரியவில்லை சேகர்பாபுவை,  ஜெயலலிதா புறக்கணிக்க தொடங்கினார். இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தால் சேகர்பாபு திமுகவினருடன் வர்த்தக தொடர்பு வைத்து  இருந்ததாக கூறப்பட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த சேகர்பாபு 2011 ஆம் ஆண்டு திமுகவில் இணந்தார். இதனையடுத்து நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் தோல்வி அடைந்த சேகர்பாபு, 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்று கோட்டைக்குள் நுழைந்தார். அப்போது நடைபெற்ற சட்ட மன்ற கூட்ட தொடரின் போது ஜெயக்குமாரும்,  சேகர்பாபு நேரடியாகவே மோதிக்கொண்டனர்.

அதே நேரத்தில் அதிமுகவின் எந்த திட்டமானாலும் அது ஜெயக்குமார் வாயிலாகத்தான் செய்தியாக வரும். அதிமுக வின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஜெயக்குமார் வாயிலாகத் தான் ஊடகங்கள் செய்தியாக்கின. இது அதிமுகவின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் ஒரு முனுமுனுப்பை ஏற்படுத்தியது. ஜெயக்குமார் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு  புகாரின் போதே ஜெயக்குமாரை கட்சியிலிருந்து ஓரம்கட்ட நினைத்த மூத்த நிர்வாகிகள் அதற்கான வாய்ப்பு அப்போது அமையாத காரணத்தால் இப்போது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி காய் நகர்த்தி வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது. மேலும்  ராயபுரத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஜெயக்குமார் இந்த முறை தோல்வி அடைந்தது அதிமுக  நிர்வாகிகளின் உள் வேலை என்றே  கூறப்படுகிறது.

இதனை மனதில் வைத்து தான் ஜெயக்குமார் கைதால் அதிமுகவினர் வருத்தம் அடையவில்லையென்றும் மகிழ்ச்சியில் இருப்பதாக சேகர்பாபு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவினர் மகிழ்ச்சியோ இல்லையோ அமைச்சர் சேகர்பாபுக்கு  உள்ளுக்குள் மகிழ்ச்சி தான் என வட சென்னை வாசிகள் கூறுவருகின்றனர்.அதனால் தான் தற்போது சேகர்பாபு இப்படி பேசுவதாக அதிமுகவின் விசுவாசிகள் தெரிவிக்கின்றனர்.. எது எப்படியோ.. அரசியல் என்ற ஆடுகளத்தில் நிரந்தர எதிரியும் இல்லை.. நிரந்தர நண்பர்களும் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொண்டால் போதும் என்று சமானிய மக்கள் தங்கள் தங்கள் நிலைப்பாட்டை கூறுகின்றனர்.

click me!