நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட அதிமுக தயார்.! திமுக தயாரா.? ஸ்டாலினுக்கு சவால் விடுத்த ஜெயக்குமார்

By Ajmal Khan  |  First Published Dec 28, 2023, 8:07 AM IST

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட திமுக-வுக்கோ, அதன் தலைவர் திரு. ஸ்டாலினுக்கோ, அடாவடி பேச்சழகன் ஆலந்தூர் பாரதி தூக்கிப் பிடிக்கும் உதவாநிதிக்கோ துணிவுண்டா?' என கேள்வி எழுப்பியுள்ள ஜெயக்குமார் தனித்துப் போட்டியிட்டு வென்று காட்டிய எங்களுக்கு அந்தத் துணிவு உண்டு என கூறியுள்ளார். 
 


எடப்பாடியும் அரசியலும்

எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலடி கொடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில், தான்தோன்றித்தனமாக, மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திரு. மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழு கூட்டத்தில் எங்களுடைய கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' அண்ணன் எடப்பாடியார் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

Tap to resize

Latest Videos

உண்மை எப்போதுமே சுடும். அந்த சூட்டின் வேகம் தாங்காமல் திரு. ஸ்டாலினின்  'ஆலந்தூர் பாரதி' நரி ஊளையிடுவது போல் அறிக்கை என்ற பெயரில் பிதற்றி இருக்கிறார். மக்கள் நலப் பணிகளில், முதலமைச்சராக இருந்தபோதும் சரி, இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதும் சரி, எடப்பாடியார் அவர்கள் இதயசுத்தியோடு பணியாற்றுவதை மக்கள் நன்கு அறிவார்கள்.

தமிழகம் முழுவதும் சுற்றும் இபிஎஸ்

"இந்தி படித்துவிட்டு வா, என் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க மாட்டேன்” என்று மாண்புமிகு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்கள் டெல்லியில் நடந்த 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் திரு. ஸ்டாலின் மற்றும் திரு. டி.ஆர். பாலு ஆகியோரின் முகத்தில் அடித்தாற்போல் கூறிய பின்பும், பதவிக்காகவும், பகட்டுக்காகவும், பணத்துக்காகவும், மானங்கெட்டு, ரோஷம் கெட்டு, வெட்கங்கெட்டு, கைகட்டி, வாய்பொத்தி நின்றது போல் நிற்பவர் எங்கள் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அல்ல. சேலத்தில் இருந்துகொண்டு அப்போதைக்கப்போது தலையை வெளிக்காட்டி, உள்ளே இழுத்துக்கொள்கிறார் என்று அண்ணன் எடப்பாடியார் குறித்து குறை கூறியுள்ளார்.

சேலம் என்ன வெளி மாநிலத்திலா இருக்கிறது ? தமிழ் நாட்டின் மத்தியில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் போகக்கூடிய வசதியுடன் உள்ளது. மேலும், உங்கள் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சென்னையில் இருந்து அரசியல் செய்ததுபோல், எடப்பாடியார் அவர்கள் சென்னையிலேயே அரசியல் செய்யவில்லை. எங்கள் எடப்பாடியார் சென்னையில் பாதி நாட்கள் இருக்கிறார். மீதி நாட்கள் மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்களை உற்சாகத்துடன் சந்திக்கிறார். பத்திரிகையாளர்களை எதிர்கொண்டு அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார். அவர் சேலத்தில் இருந்தாலும், சென்னையில் இருந்தாலும், இந்த விடியா திமுக அரசின் அராஜகங்களை மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறார். 

நாவடக்கம் தேவை

உங்கள் தலைவர் திரு. ஸ்டாலின் போல் பத்திரிகையாளர்களை, 'எதிர்நோக்கும் கேள்வி பதில் பட்டியலுடன்' சந்திப்பதில்லை. எங்கள் பொதுச் செயலாளர் கேட்ட கேள்விகளுக்கும், சுட்டிக் காட்டிய குறைகளுக்கும், விளையாட்டு மந்திரியின் வாய்க் கொழுப்பு குறித்த விமர்சனங்களுக்கும், முன்வரிசை மந்திரிகள் பலர் திரு. பொன்முடியை தொடர்ந்து நீதிமன்றத்தில் தண்டனை பெற இருப்பது பற்றியும், புரட்சித் தமிழர் எடுத்து வைத்ததற்கு, முறையாக பதிலளிக்க வக்கற்ற திரு. மு.க. ஸ்டாலினும், அவர் அள்ளி வீசும் எலும்புத் துண்டுகளை கவ்வி குரைப்பவர்களுக்கும் நாவடக்கம் தேவை. "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்ற குறளுக்கான அர்த்தத்தை திரு. (அப்பன்) கருணாநிதி எழுதிய குறளோவியம் படித்து தெரிந்துகொள்ளவும். நாகரீகத்தையும், நாவடக்கத்தையும் தி.மு.க-வினரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது என்று எங்களுக்குத் தெரியும். 

2014 பாராளுமன்றத் தேர்தலிலும், 2016 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வென்ற வரலாற்றை மறந்துவிட்டு, 2011-ல் எதிர்க்கட்சி அந்தஸ்த்தைக்கூட அடைய முடியாமல் மூளி அலங்காரியாக தி.மு.க. நின்ற அவலத்தை உணராமல், தோல்வி சாமி என்று மக்களின் முதல்வர் எடப்பாடியாரை ஏகடியம் பேசுகிறது கோபாலபுர கொத்தடிமை பாரதி. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளை கோடிகளில் விலைபேசி வாங்கி அவைகளின் முதுகில் ஏறி சவாரி செய்து, பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசி அரியணை ஏறிய திரு. மு.க. ஸ்டாலினின் எடுபிடிக்கு ஒரு சவால் 'வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட திமுக-வுக்கோ, அதன் தலைவர் திரு. ஸ்டாலினுக்கோ, அடாவடி பேச்சழகன் ஆலந்தூர் பாரதி தூக்கிப் பிடிக்கும் உதவாநிதிக்கோ துணிவுண்டா?'

தனித்து போட்டியிட தயாரா.?

தனித்துப் போட்டியிட்டு வென்று காட்டிய எங்களுக்கு அந்தத் துணிவு உண்டு. சூரபத்மனை அந்த வடிவேல் முருகன் வென்றது போல் தமிழகத்தின் தீய சக்தி திமுக-வை எங்கள் எடப்பாடியார் பழனி'சாமி' மக்கள் துணையோடு சம்ஹாரம் செய்வார். எனவே, இனியாவது நாவடக்கத்துடன் எங்கள் பொதுச் செயலாளருடைய பேச்சில் உள்ள உண்மைகளை உணர்ந்து, மீதி உள்ள 29 மாதங்களில், வாக்களித்த மக்களுக்குத் தேர்தலின்போது நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று வலியுறுத்துகிறேன் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

மாமனார் வீட்டில் விழாவைச் சிறப்பித்த தோல்விசாமி... பேச அருகதை இல்லை... ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்

click me!