எம்.ஜி.ஆர். ஜெயலலிதா குறித்து யார் வேண்டுமானாலும் புகழ் பாடிக் கொள்ளலாம், ஆனால் அவர்களின் திட்டங்களை செயல்படுத்தும் ஆட்சி அதிமுக ஆட்சியாக தான் இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை நீக்கியது ஏன்.?
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் பேரன் இன்பநிதி பங்கேற்றது மரபுகளை மீறிய செயல் என கண்டித்தார். திமுகவினருக்கு இனி முப்பெரும் தலைவர்களாக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இன்பநிதி தான் உள்ளதாக விமர்சித்தார். புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை இன்னும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். அமைச்சர்களுக்கு பல்வேறு முக்கிய ரகசிய கோப்புகள் வரும், அதை சிறையில் இருந்து செந்தில் பாலாஜி எப்படி பார்ப்பார் என கேள்வி எழுப்பியவர், எனவே ரகசியத்தை காக்க தவறிய திமுக அரசை 356வது சட்ட பிரிவு படி கலைக்கலாம் என தெரிவித்தார்.
அண்ணாமலை பாதயாத்திரை
திமுகவின் தூண்டுதலால் தான் கோடநாடு கொலை கொள்ளையை கண்டித்து ஓ.பி.எஸ் ஆர்பாட்டம் நடத்துவதாக கூறிய அவர், ஓ.பி.எஸ் டிடிவி கூட்டணி என்பது அச்சாணி இல்லாத வண்டி, அது மூன்றடி கூட ஓடாது என தெரிவித்தார். அண்ணாமலை பாதயாத்திரை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கட்சியை வளர்க்க அண்ணாமலை பாதயாத்திரை செல்வதாகவும், எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே திமுகவின் ஊழலை அதிமுக எதிர்த்து வருகிறது. எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம் அண்ணாமலை அவரது கடமையை செய்வதாக தெரிவித்தார். மகளிர் உரிமை தொகை திட்டத்துக்காக ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார், அரசு அமைத்த பொருளாதார வல்லுனர் குழுவால் எந்த பயனும் இல்லை. விலைவாசி உயர்வு, வரிகள் உயர்த்தியது தான் மிச்சம். மக்கள் சிரமப்படும் நிலையில் தான் உள்ளனர் என கூறினார்.
டாஸ்மாக் கூடுதல் வசூல் ஏன்.?
மேலும், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக ஐந்து ரூபாய் வசூலிப்பதை அமைச்சர் முத்துசாமி நிறுத்த வேண்டும் இல்லையென்றால் அவருக்கு ஐந்து ரூபாய் முத்துசாமி என்ற பெயர் வந்துவிடும் என கூறினார். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா குறித்து அமித்ஷா பேசியது பாராட்டுக்குரியது. யார் வேண்டுமானாலும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா புகழ் பாடிக்கொள்ளலாம். ஆனால் அவர்களின் திட்டங்களை செயல்படுத்தும் அரசு அதிமுக அரசாக தான் இருக்கும் என கூறினார்.
இதையும் படியுங்கள்