கட்சி எக்கேடு கெட்டாலும் ஓ.பி.எஸ்க்கு கவலை இல்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக கூடாது என்பதில் ஓ பி எஸ் உறுதியாக இருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கடுமையான கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுச்செயலாளர் தேர்தல் அறிவித்ததும், ஓபிஎஸ் நிதானம் இழந்து விரக்தியில் பேசுகிறார். அதிமுக நலனுக்காக ஓபிஎஸ் எப்போதாவது பேசியிருக்கிறாரா? என கேள்வி எழுப்பியவர், ஜெயலலிதா மறைந்தபின் இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் ஓபிஎஸ் என குற்றம்சாட்டினார். பொதுச்செயலாளர் பதவியை பிக்பாக்கெட் என ஒபிஎஸ் பேசுவது அரசியல் நாகரிகமா? என கேள்வி எழுப்பினார்.
அரசியல் சகுனி
கடந்த காலத்தில் என்னிடம் இருந்த நிதித்துறையை பறித்துக் கொண்ட ஓபிஎஸ், சசிகலா குடும்பத்தினர் கட்சிக்குள் வரக்கூடாது என கூறியவர் ஓபிஎஸ் தான் என குற்றம்சாட்டினார். நாடாளுமன்ற தேர்தலின் போது தேனியில் தன் மகனை மட்டும் வெற்றிபெற வைத்து, அதிமுக வேட்பாளர்களை தோற்க வைத்தவர் ஓ. பன்னீர் செல்வம், இதேபோல சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர் செல்வத்தை தவிர வேறு யாருமே அவரது மாவட்டத்தில் வெற்றிபெறவில்லை. கட்சி எக்கேடு கெட்டாலும் ஓ.பி.எஸ்க்கு கவலை இல்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக கூடாது என்பதில் ஓ பி எஸ் உறுதியாக இருந்தார். ஆமை புகுந்த வீடு என்பதை போல, பண்ருட்டி ராமசந்திரன் சேர்ந்த கட்சி எல்லாம் என்ன ஆனது என அனைவருக்கும் தெரியும், அவர் ஒரு அரசியல் சகுனி என விமர்சித்தார்.
சசிகலாவிற்கு தொடர்பு இல்லை
வி கே சசிகலாவுக்கும் அதிமுகவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஓ பி எஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியது தொடர்பாக சட்டரீதியாக சந்திப்போம். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் குறித்து நான் எதுவும் பேச முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் 40 நமதே என்ற அடிப்படையில் நாங்கள் பணியாற்றுவோம். கொடநாடு வழக்கு என பூச்சாண்டி காட்டுவதால் பயப்பட மாட்டோம். துக்க வீட்டிற்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலினும், ஓ பி எஸ்ஸும் சிரித்து பேசுவது அரசியல் நாகரீகமா ? திமுகவின் பி டீம் தான் ஓ.பி.எஸ். திமுகவிடம் ஆதரவு கேட்பது வெட்கமாக இல்லையா ? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள்
கூட்டணி பற்றியோ வேட்பாளர் பற்றியோ பாஜக மாநிலத் தலைவர் முடிவெடுக்க முடியாது..! எச் ராஜா அதிரடி