இன்பதுரை தூண்டிலில் சிக்கிய ஜெயக்குமார் : மீன் வருவலுக்கு தயாராகும் தமிழக சட்டசபை!!

First Published Jun 18, 2017, 10:09 AM IST
Highlights
jayakaumar being criticized by dhanabal


காலங்கள் மாறும்! காட்சிகள் மாறும்!...என்பதற்கு அ.தி.மு.க. மட்டும் விதிவிலக்கா என்ன? தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் சிரித்துப் பேச கூட ஏதோ ஒரு விவாதத்தையும், ஆதாயத்தையும் முன்வைக்க வேண்டிய மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது அக்கழகம். 

அ.தி.மு.க. எத்தனை அணியாக பிரிந்துள்ளது என்பது குறித்து வாரமலர் குறுக்கெழுத்து போட்டியில் இடமிருந்து வலமாக ஒரு கேள்வியே வைக்கலாம். அத்தனை பிளவுகள். 

இதில் ஒரு பியூட்டி என்னவென்றால் தீபா அணியை தவிர மற்ற மூன்று அணியின் சார்பாகவும் எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் ஜெயலலிதா தலைமையில் ஒரே பெட்டிக்குள் அடைபட்ட தீக்குச்சிகளாய் இருந்த இவர்கள் இன்று ஆளாளுக்கு தீப்பந்தம் தூக்கிக் கொண்டு சண்டைக்கு நிற்கிறார்கள். அ.தி.மு.க.வினரால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கூட சிநேகமாக பார்த்து சிரித்துவிட முடிகிறது.

ஆனால் தங்கள் கட்சியின் வேற்ரு அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.வை பார்த்து சிநேகிக்க முடியவில்லை, சிரிக்க முடியவில்லை. காரணம்?... ஒருவரை ஒருவர் துரோகியாகத்தான் பார்க்கிறார்கள். எதிரியை விட துரோகி மோசமானவன் என்பது அவர்களின் வாதம். 

இந்நிலையில் சட்டமன்றத்தில் நிகழும் சின்னச்சின்ன சுவாரஸ்யங்கள்தான் அ.தி.மு.க.வின் அணிகளுக்குள் அவ்வப்போது நட்பு பூவை பூக்கச்செய்கிறது. 
அதற்கு சமீபத்திய சான்று ஒன்று...

தினகரன் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.வான இன்பதுரை “திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் மீன்களை பதப்படுத்தி வைப்பதற்கான குளிர்பதன கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?” என்று கேட்க, அமைச்சர் ஜெயக்குமாரோ “அரசின் பரிசீலனையில் அத்திட்டம் தற்போது இல்லை.” என்றார்.

உடனே இன்பதுரை “இடிந்தகரையில் கிடைக்கும் மீன்கள் ருசியானவை. அவற்றை பதப்படுத்த அரசு குளிர்பதன கிடங்கு அமைத்து தரவேண்டும்.” என்று தூண்டில் போட்டார்.
உடனே சபாநாயகர் “ருசியான மீன்கள் என்றால் அனைத்து உறுப்பினர்களுக்கும் அது கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்.” என்று லேசாக கலாய்த்தார். 

இதில் அனைவரும் வாய்விட்டு சிரிக்க, சட்டென்று எழுந்த ஜெயக்குமார் “மீன்வளத்துறை மானியக்கோரிக்கையின் போது அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் ருசியான மீன் வழங்கப்படும்.” என்றபடி இன்பதுரையை பார்க்க, அவர் சிரித்தார். 

இந்த நேரத்தில் “மீன பொரிச்சு கொடுப்பீங்களா இல்ல அவிச்சு கொடுப்பீங்களா?” என்று தினகரன் எம்.எல்.ஏ.க்கள் சைடிலிருந்து ஒரு குரல் வர, “அது சஸ்பென்ஸ். ஆனா ருசியா இருக்கும்.” என்று ஜெயக்குமார் மீண்டும் ஆசையூட்ட சபை கலகலவென்றானது. 

ஜெயலலிதா சுட்டிய திசையில் யோசிக்காமல் பாயும் படைவீரர்களாய், ஏக ஒற்றுமையாய் இருந்த அ.தி.மு.க.வின் அடலேறுகள் இன்று தங்களுக்கு புன்னகைத்துக் கொள்ள ருசியான மீன் வேண்டியிருக்கிறது. 

என்ன செய்வது? எதிர்க்கட்சி தலைவரை பார்த்து சிரித்ததுக்காக முதல்வருக்கே பனிஷ்மெண்ட் கொடுத்த பரம்பரைக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

click me!