
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக பொது செயலாளர் பதவியை சசிகலா கைப்பற்றுவதற்கு முன்பாக, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற சசிகலா அரசியலுக்கு வரவேண்டும் என்று பலர் அழைப்பு விடுக்கும் காட்சியை அடிக்கடி ஒளிபரப்பியது ஜெயா டி.வி.
அதன் பின்னர், சசிகலா முதல்வர் நாற்காலியை குறிவைத்து நகரும்போது, கட்சியும், ஆட்சியும் ஒரே நபரின் கட்டுப்பாட்டில் இருப்பதே நல்லது, அதற்கு சசிகலா மட்டுமே பொருத்தமானவர் என்று பலரை சொல்ல வைத்து ஜெயா டி.வி யில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது.
அதை தொடர்ந்து, கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ க்களை, சசிகலா நேரில் சென்று சந்திக்கும் காட்சிகளை, அவரது கார் போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டு, கூவத்தூர் சென்று சேரும் வரை நேரலையில் ஒளிபரப்பியது ஜெயா டி.வி.
அதன் பின்னர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் பற்றிய செய்திகளையே ஜெயா டி.வி திரும்ப திரும்ப ஒளிபரப்பி கொண்டிருந்தது.
தற்போது, கட்சியையும், ஆட்சியையும் திறம்பட வழி நடத்த சசிகலாவும், தினகரனும் கட்டாயம் தேவை என்று திரும்ப, திரும்ப ஒளிபரப்ப, ஜெயா டி.வி ஊழியர்களுக்கு உத்தரவிட பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையோ, அதில் முதல்வர், மற்றும் அமைச்சர்கள் பேசியதை பற்றியோ ஒரு செய்தி கூட, ஜெயா டி.வி யில் ஒளிபரப்பப்படவில்லை.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அணிகளை இணைப்பது, இரட்டை இலை சின்னத்தை மீட்பது, சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு ஒதுக்குவது குறித்தே பேசப்பட்டது.
அதனால், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்து ஒரு செய்தி கூட ஜெயா டி.வி யில் ஒளிபரப்பப்படவில்லை என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.
மேலும், ஜெயா டி.வி. சசிகலா குடும்ப உறவுகளுக்காக தொடங்கப்பட்ட டி.வி யா? அல்லது, அதிமுக என்ற கட்சிக்காக தொடங்கப்பட்ட டி.வி யா? என்றும் அவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.